'சமஸ்கிருதம் அறியாததால் அறிவு செல்வத்தை இழந்தோம்'
சென்னை:''சமஸ்கிருதத்தை அறியாததால், நம் அறிவுச் செல்வங்களை இழந்தோம்,'' என, சி.பி.ஆர்ட் சென்டர் இயக்குநர் நந்திதா கிருஷ்ணா பேசினார்.
சென்னை, ஷசுன் மகளிர் கல்லுாரியில் நடந்த வரலாற்று கருத்தரங்கத்தின் நிறைவு நாளான நேற்று, சி.பி.ஆர்ட் சென்டர் இயக்குநர் நந்திதா கிருஷ்ணா பேசியதாவது:
ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகே, நாம் நாகரிகம் அடைந்ததாக நம்புகிறோம். உண்மையில், நம் முன்னோர்கள் அனைத்து துறைகளிலும் அறிவுடன் இருந்துள்ளனர். 'சரகர் சம்ஹிதா' என்ற நுாலில், மருத்துவம், மருந்து தயாரிப்பு முறைகளையும், போதாயனரின், 'சுல்ப சூத்திரம்' நுாலில், கடினமான கணக்குகளுக்கு தீர்வுகளையும் எழுதி உள்ளனர்.
நமக்கு சமஸ்கிருத மொழி தெரியாததால் அவற்றை இழந்தோம். அவை பிரிட்டிஷாரால் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுக்க கற்பிக்கப்பட்டதால், நாம் அவர்களிடம் இருந்து கற்றதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், மத்திய தொல்லியல் துறை உதவி இயக்குநர் அலோக் திரிபாதி பேசியதாவது:
பழமை என்பதை, பழையது என நம்புகிறோம். பழமை என்பது, நம் பாரம்பரிய அறிவு சார்ந்தது. பழையது என்பது, பயன்படுத்தப்பட்ட பயன்படாதது என்று பொருள். அதனால் தான், நம் வரலாற்றை மறந்துவிட்டு, நவீன வரலாறு என்ற பெயரில், பிரிட்டிஷ் வரலாறை படிக்கிறோம்.
நம் வரலாறை பாடப் புத்தகங்களின் வாயிலாக அறிய முடியாத நிலையில், இதுபோன்ற கருத்தரங்குகள் தேவையாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.