கிரெடிட் கார்டுகளுக்கு அதிகரிக்கும் மவுசு; பயன்பாட்டில் இருப்பவை 11 கோடி கார்டுகள்!
புதுடில்லி: கிரெடிட் கார்டுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 8,16,195 பேர் கிரெடிட் கார்டுகளை வாங்கி உள்ளனர்.
ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆபர்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் கிரெடிட் கார்டு. இந்த கார்டை பயன்படுத்தி, வாடிக்கையாளர் ஒருவர், எந்த ஒரு பொருளையும் பணம் செலுத்தாமல் வாங்கி கொள்ளலாம்.
பின்னர் வாங்கிய பொருளுக்கான பணம் அல்லது பெற்ற சேவைக்கான கட்டணத்தை, குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் குறிப்பிட்ட தேதிகளுக்குள் பணம் செலுத்த தவறினால் அதிக கட்டணம் செலுத்தும் நிலை உருவாகிவிடும்.
சிக்கல் இருந்தாலும், கிரெடிட் கார்டுகளை வாங்குவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 8,16,195 பேர் கிரெடிட் கார்டுகளை வாங்கி உள்ளனர். இதற்கு காரணம், வரும் திருமண சீசன், கோடை விடுமுறை காலங்களில் ஜாலியாக கொண்டாட மக்கள் விரும்புவதால் கிரெடிட் கார்டுகளை நாடி வருகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 3,50,000 கார்டுகள் வழங்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, எச்.டி.எப்.சி., மற்றும் எஸ்.பி.ஐ., வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிக கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது.கடந்த டிசம்பர் மாதம் மட்டும், கிரெடிட் கார்டுகள் வாயிலாக, 1.9 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, புழக்கத்தில் உள்ள மொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை டிசம்பர் 2024 இறுதிக்குள் 10.8 கோடியை எட்டி உள்ளது. இப்போது 11 கோடியை நிச்சயம் கடந்திருக்கும். இந்த எண்ணிக்கை, நவம்பர் மாதம் 2024ல் 10.72 கோடியாக இருந்தது. டிசம்பர் மாதம் 2023ல் 9.79 கோடியாக இருந்தது. அதாவது, ஓராண்டு காலத்தில் ஒரு கோடி பேர் புதிதாக கிரெடிட் கார்டு வாங்கியுள்ளனர்.
2024ம் ஆண்டு புதிய கிரெடிட் கார்டுகளை வாங்கியவர்கள் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:
* மே- 7,60,625
* ஜூன்-5,12,641
* ஜூலை- 7,55,419
* ஆகஸ்ட்- 8,55,931
* செப்டம்பர்- 6,78,950
* அக்டோபர்- 7,86,337
* நவம்பர்- 3,50,055
* டிசம்பர்- 8,16,195