புனேவில் பரவும் அரிய வகை நோய் பாதிப்பு; 73 பேருக்கு சிகிச்சை; வென்டிலேட்டரில் 14 பேர்!
புனே: புனேவில் அரிய நரம்பியல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் 73 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில், குய்லின்-பார் சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய், மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும். இதனால் 73 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டனர்.
அறிகுறிகள் என்னென்ன?
* முதுகு அல்லது கால்களின் ஆழமான தசை வலி
* பக்கவாதம்
* சுவாச பிரச்னை
* பேசுவதில் சிரமம்
* பார்வை பிரச்னைகள்
இந்த நோய் பாதிப்பு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. நான்கு நாட்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக பரிசோதனையைத் தொடங்க உள்ளனர். பாதிக்கப்பட்ட 73 நோயாளிகளில், 44 பேர் புனே கிராமப்புறத்திலும், 11 பேர் புனே நகராட்சிப் பகுதியிலும், 15 பேர் சின்ச்வாட் நகராட்சிப் பகுதியிலும் உள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கிர்கித்வாடி, டி.எஸ்.கே. விஷ்வா, நான்டெட் நகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த நோய்க்கு தடுப்பூசி கிடையாது. இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் வந்த உடன் நரம்பியல் மருத்துவரை அணுகினால் குணம் அடையலாம். அறிகுறிகள் தென்பட்ட உடனே டாக்டரை அணுகும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.