நீலகிரியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
கூடலூர்: நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மலை மாவட்டமான நீலகிரியில் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது வாடிக்கையான ஒன்றாகும். ஆனால், கடந்த சில தினங்களாக இது அதிகரித்தே காணப்படுகிறது. அண்மையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், அதனை நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இதனால், நீலகிரி மக்கள் சற்று நிம்மதியடைந்திருந்தனர். இந்த நிலையில், , கூடலூர் தேவர்சோலை அருகே, திரி டிவிசன் பகுதியில், இன்று அதிகாலை, ஜம்சீர், 37, என்பவர், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், ஜம்சீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நீலகிரி மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.