மாதந்தோறும் வனத்துறை, விவசாயிகள் குறைதீர் கூட்டம்:
தேனி : மாதந்தோறும் 3வது வாரம் வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அறிவித்தார்.
தேனியில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அலுவலர்கள்,விவசாய சங்க பிரநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் பேசியதாவது:
பாண்டியன், தலைவர், தேனி மாவட்ட விவசாயிகள் சங்கம்: திசு வாழைகன்று உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கம்பம் பள்ளத்தாக்கில் மழையால் திராட்சைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
நிர்மலா, துணை இயக்குனர், தோட்டக்கலைத்துறை: யுனஸ்கோ அறிவிப்பின் படி தேனி மாவட்ட கிராம பொருளாதாரம் வளர்ச்சி அடைய மலை வாழையில் திசுகன்றுகள் இலக்கு உள்ளது. நிதி வரும்போது வழங்கப்படும்.
கலெக்டர்:பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, பாதிப்பு இருந்தால் இழப்பீடு வழங்கப்படும்.
அங்குச்சாமி, தலைவர், தமிழக நீராதாரங்கள் பாதுகாப்புக்குழு: கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. இங்கு 14 டாக்டர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆறு மாதங்களாக டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கண்டமனுாரில் அமைக்க வேண்டும்.
கலெக்டர்: மாவட்ட சுகாதாரத்துறையில் பேசி மாற்றுப்பணியில் டாக்டர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சீனிராஜ், தலைவர், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்: மதுரை போடி பயணிகள் ரயில் இதற்கு முன் வள்ளல்நதி பயணிகள் நிறுத்தத்தில் நின்று சென்றது. தற்போது அந்த நிறுத்தம் பயன்பாட்டில் இல்லை. இதனால் விவசாயிகள் விளை பொருட்களை தேனிக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. அந்த நிறுத்தத்தை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: சாத்தியகூறுகள் ஆராய்ந்து ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
பெனிட்டோ பவுல்ராஜ், ராயப்பன்பட்டி: குரங்குகள், மலைப்பாம்புகள், சிலவிலங்குகளை வேறு பகுதியில் இருந்து மக்கள் குடியிருப்புப் பகுதியில் விட்டு செல்லும் வனத்துறை மீது நடவடிக்கை வேண்டும்.
கலெக்டர்: அடிப்படை ஆதாரம் இல்லாத தகவல்களை கூறக்கூடாது. பன்றி, வனவிலங்குகளால்பயிர் சாகுபடி பாதிப்புகுறித்து தெரிவித்தீர்கள். அதனால் பிரதிமாதம் தோறும் 3வது வெள்ளியன்று வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்றார். இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.