கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையை புறக்கணித்த மக்கள்!

கோவை: கோவை மாவட்டம் எஸ். எஸ்.குளம் ஒன்றியத்தை சேர்ந்த கீரணத்தம் ஊராட்சி கோவை மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், இன்று கீரணத்தம் ஊராட்சியில் சாம்பிராணி குட்டை பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது.



வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கீரணத்தம் ஊராட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பொதுமக்கள் கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்கக்கூடாது என்கிற ஒரு தீர்மானம் மட்டுமே நிறைவேற்ற வேண்டும்.



மற்ற இதர தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்று வலியுறுத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர், நீங்கள் கூறும் தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம். அது தவிர மற்ற தீர்மானங்களையும், நிறைவேற்ற ஒத்துழைப்பு தாருங்கள் என நீண்ட நேரம் சமாதானம் தெரிவித்தார். எனினும் அதை கிராம மக்கள் ஏற்க மறுத்தனர்.



கிராம சபை கூட்டத்தில் கையெழுத்திட மறுத்து புறக்கணித்தனர். மேலும் கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் தங்கள் ஊராட்சி மாநகராட்சி உடன் சேர்க்கப்படுவதை எதிர்த்து தங்கள் உடைகளில் கருப்பு பேட்ச் அணிந்து வந்திருந்தனர். மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Advertisement