தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை அரசுக்கு ரூ.1 கோடி மிச்சம்
புதுச்சேரியில், காங்., தி.மு.க., கூட்டணி ஆட்சியின்போது, இலவச அரிசி வழங்குவதில் முறைகேடு, ஊழல் நடப்பதாக பல புகார்கள் எழுந்தது. இதனால் அப்போதைய கவர்னர் கிரண்பேடி, இலவச அரிசிக்கு பதில் அதற்கான மானிய தொகையை பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் முறையை கொண்டு வந்தார்.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களும் வழங்கப்படும். புதுச்சேரியில் அரிசி, சர்க்கரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அரிசியும் நிறுத்தப்பட்டதால், ஒட்டுமொத்தமாக அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டது.
மீண்டும் ரேஷன் கடை திறந்து அரிசி வழங்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். ரேஷன் கடை திறந்து மாதாந்திர இலவச அரிசி 20 கிலோ வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. அதற்கு முன்னோட்டமாக, தீபாவளிக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கான்பேட் மூலம் அரிசி, சர்க்கரை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன.
இதற்காக அரசு ரூ. 16 கோடி ஒதுக்கியது. ஒட்டுமொத்த ரேஷன் கார்டுகளில் 90 சதவீத கார்டுகளுக்கு தேவையான அரிசி, சர்க்கரையை கான்பேட் கொள்முதல் செய்து விநியோகித்தது. அதன்படி, 10 சதவீத கார்டு உரிமையாளர்கள் ரேஷன் கடை பக்கம் கூட எட்டிபார்க்கவில்லை. இதன் மூலம் அரசுக்கு மூலம் அரசுக்கு ரூ. 1 கோடி வரை மிச்சமானது.