எந்த பகுதியில் வீடு வாங்குவது என்பதை எப்படி முடிவு செய்வது?

சொந்தமாக வீடு அல்லது மனை வாங்க வேண்டும் என்று திட்டமிடுவோர், அதற்கு ஏற்ற பகுதியை தேர்வு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஆரம்பத்தில் அவர்கள் மனதில் ஒரு பகுதியை தேர்வு செய்து இருப்பர். ஆனால், தேடலின் போது அது மாறியிருக்கும்.

பொதுவாக எந்த பகுதியில் வீடு, மனை வாங்க வேண்டும் என்பது தொடர்பாக, ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பங்கள் இருக்கும். இந்த விருப்பங்கள் எதார்த்த நிலையுடன் சேர்ந்து நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை கள நிலையில் ஆராய வேண்டும்.

இந்த விவகாரத்தில் சொந்தமாக வீடு வாங்குவதா அல்லது மனை வாங்குவதா என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்யுங்கள். வீடு வாங்குவது என்றால் உடனடியாக குடியேறுவதற்கா அல்லது அதை வாடகைக்கு விட்டு, தற்போது இருக்கும் பகுதியில் தொடர்வதா என்பதை முடிவு செய்யுங்கள்.

கல்வி, வேலை வாய்ப்பு போன்ற காரணங்களுக்காக நீங்கள் தற்போது குடியிருக்கும் பகுதி அல்லது அதற்கு மிக அருகில் உள்ள வேறு பகுதியில், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீடு கிடைத்தால், அதை வாங்குவதில் தவறு இல்லை. சென்னை போன்ற நகரங்களில் பிரபலமான கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதியில், பட்ஜெட் விலையில் வீடு கிடைப்பதே அரிதாகி உள்ளது.

இதனால், பட்ஜெட்டுக்குள் அடங்க வேண்டும் என்பதற்காக, சற்று தொலைவில் குறைந்த விலையில் வீடு வாங்குவதிலும் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். இவ்வாறு, நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொலைவில் வீடு தேடும் நிலையில், அங்கு ஒரு குடும்பம் வசிப்பதற்கு ஏற்ற அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்று பாருங்கள்,

எவ்வித வெளி உலக தொடர்பும் இன்றி சிறிய கிராமத்தில் கட்டப்பட்ட குடியிருப்பு திட்டத்தில் நீங்கள் புதிய வீட்டை வாங்கினால், அதை வாடகைக்கு விடுவதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் போய்விடும். குறிப்பாக, சாலை வசதி, வாகன போக்குவரத்து போன்ற வசதிகள் இல்லாத இடங்களில் புதிய வீட்டை வாங்குவதனால் சற்று யோசித்து செயல்படுங்கள்.

அக்கம் பக்கத்தில் போதிய வளர்ச்சி இல்லாத, ஆள் நடமாட்டம் அரிதாக காணப்படும் பகுதிகளில் வீடு வாங்கினால், பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். நீங்கள் வாங்கிய வீட்டில் கதவுகள், ஜன்னல்கள், வெளிப்புற விளக்குகள், குழாய்கள் போன்றவை திருடு போகவும் வாய்ப்பு உள்ளது.

இது போன்ற பகுதியில் தனியாக நிலம் வாங்கி வீடு கட்டியவர்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாக மாறி விடுகிறது. குறிப்பாக, அக்கம் பக்கத்தில் அதிக மக்கள் குடியேறிய பகுதி என்றால் தான், அங்கு நீங்கள் வாங்கும் வீட்டிற்கு வாடகைக்கு ஆள் கிடைப்பர். அக்கம் பக்கத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லாத பகுதி என்றால், வாடகைக்கு கூட ஆள் கிடைக்காமல் வீட்டை பூட்டியே வைக்கும் நிலை ஏற்படும். இதனால், நீங்கள் செய்த முதலீடு எவ்வித பயனும் இன்றி, ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

Advertisement