சொந்தத்தொழிலில் மனநிறைவு தான் சொத்து

படித்து சாப்ட்வேர் நிறுவனத்தில் மாதச்சம்பளத்திற்கு வேலை பார்த்தாலும் ஏற்படாத மனநிறைவு சுயதொழிலில் கிடைத்துள்ளது என்கிறார் மதுரையை சேர்ந்த சணல் ஹேண்ட்பேக் தயாரிப்பாளர் வைஷ்ணவி.

வைஷ்ணவி கூறுகையில் 'பி.எஸ்சி., ஐ.டி., படித்து சென்னை, மதுரையில் சாப்ட்வேர் நிறுவனங்களில் ஏழாண்டுகள் வேலை பார்த்தேன். குழந்தை பிறந்த பின் பணியைத் தொடர முடியவில்லை. மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் 3 மாத கால இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுவதை தெரிந்து கொண்டேன்.

சணல் பையில் கற்றுத்தருவதை எல்லாம் உள்வாங்கினேன். சணல் பைகளில் அடிப்படை முதல் அட்வான்ஸ் தொழில்நுட்பம் வரையும் மார்க்கெட்டிங் உத்தி, விலை நிர்ணயம் வரை கற்றுத் தந்தனர். 3 மாத பயிற்சி முடிவதற்கு முன்பே வீட்டில் ஹேண்ட் பேக்குகளை நானே தைக்க ஆரம்பித்தேன். அவற்றை போட்டோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தேன்.

அதைப்பார்த்து சென்னையில் இருந்து ஒருவர் நவராத்திரிக்கு சணல் துணியில் தயாரித்த 100 தாம்பூல பைகள் கேட்டார். நிறைய மெனக்கெட்டு தாம்பூலப் பைகள் தயாரித்து கொடுத்தேன். நன்றாக இருந்தது என பாராட்டியதோடு அவர் மூலம் அடுத்தடுத்து மூன்று ஆர்டர்கள் கிடைத்தது. திருமண பரிசாக பாசிமணி, குந்தன் கற்கள் வேலைப்பாட்டுடன் பொட்லி பேக் (சுருக்கு பை) செய்து கொடுத்தேன். அடுத்து ஜூவல்லரி கடைக்கு 100 பைகள் ஆர்டர் தந்தனர்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப டிசைனில் ஹேண்ட்பேக், பைல், வாட்டர் பாட்டில் தயாரித்து கொடுக்கிறேன். என்னுடன் படித்த 10 பேருடன் சேர்ந்து எனக்கு கிடைக்கும் ஆர்டருக்கேற்ப அவர்களுக்கு வேலை வாய்ப்பும் தருகிறேன். கண்காட்சிகளிலும் ஸ்டால்கள் அமைப்பதால் விற்பனை நன்றாக உள்ளது. தோழி ராஜேஸ்வரியுடன் சேர்ந்து ஸ்டால்களில் பங்கேற்கிறேன்.

ஹேண்ட்பேக், மினி ஹேண்ட்பேக், ஒற்றை ஜிப், இரட்டை ஜிப் ஹேண்ட்பேக், ஸ்லிங் பேக், லார்ஜ் பேக் என குட்டீஸ் முதல் பெரியவர்கள், ஆடவரும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கிறேன். பைல்களில் மட்டும் 10 வகைகள் விற்பனை செய்கிறேன். பரிசுப் பொருளாக கொடுப்பதற்கு குறைந்தது ரூ.30க்கு பொட்லி பேக் (சுருக்கு பை) முதல் ரூ.150க்கு ஹேண்ட் பேக், ரூ.80க்கு வாட்டர் பேக் பாட்டில் சணல் பைகள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்கிறது.

வேலை செய்யும் போது, நமக்கு தோன்றிய புதுமைகளை புகுத்த முடியாது. சொந்தத் தொழிலில் அதைச் செய்யும் போது மற்றவர்களின் பாராட்டு உடனுக்குடன் கிடைப்பதால் சாதித்த உணர்வு ஏற்படுகிறது. புதிதாக பிறந்தது போன்று மனநிறைவு ஏற்படுகிறது. ஒவ்வொரு புதுமைக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கிறது. இதை விட வேறென்ன வேண்டும் என்றார்.

இன்னும் அறிய அலைபேசி: 81249 61760.

Advertisement