படகு போல் மலை போல் வீடுகள்: விருதுகள் குவிக்கும் தம்பதி

மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் சேகர், ஷாமினி தம்பதி கட்டடக் கலையில் விருதுகள் பல பெற்று சாதித்து வருகின்றனர். எங்கு கட்டடங்களை கட்டுகிறார்களோ அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டே பாரம்பரியம் மாறாமல் கட்டடங்களை கட்டுவது இவர்களின் தனிச்சிறப்பு.

மானாமதுரையில் கிடைக்கும் பானைகளை பயன்படுத்தி, சுவருக்கு புதிய டிசைன் உருவாக்கி திருப்புவனத்தில் வீடு கட்டினர். ஒரே மாதிரியான முறையை பின்பற்றாமல் ஒவ்வொரு திட்டத்திலும் புதுமைகளை புகுத்துவதால் விருதுகள் எளிதாக இவர்களுக்கு வசமாகின்றன.

விக்னேஷ் கூறியது: பி.ஆர்க்., படித்தபோது இருவரும் பரஸ்பரம் அறிமுகமானோம். பின்னர் திருமணம் செய்து கொண்டோம். படித்து முடித்த இரண்டே மாதங்களில் 2016ல் அழகர்கோவில் ரோட்டில் உள்ள பாரதி பூங்காவை சீரமைக்கும் திட்டத்தை அப்போதைய கமிஷனர் சந்தீப் நந்துாரி எங்களுக்கு வழங்கினார். அதுவே எங்களின் முதல் புராஜெக்ட். 2017ல் திறக்கப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது.
Latest Tamil News
2019ல் சொந்த ஊர் திருப்பத்துாரில் குடியிருப்பு கட்டும் வாய்ப்பு வந்தது. செட்டிநாடு கட்டடக் கலையில் புதுமையாக கட்டினோம். அதன் வடிவமைப்பால் 'சிறந்த கட்டடக் கலைஞர்கள்' என உலகளவில் அங்கீகாரம் கிடைத்தது. 2 தேசிய விருதுகள், 2 சர்வதேச விருதுகள் கிடைத்தன. ஆஸ்திரேலியா இதழ் ஒன்றில் 'ஹவுஸ் ஆப் தி இயர்' பட்டத்திற்கு இந்தியாவில் இருந்து தேர்வான ஒரேயொரு புராஜெக்ட் அது.

பின் பல்வேறு திட்டங்கள் கைகூடி வர தனியாக நிறுவனம் துவங்கினோம். ஒன்றை அழகுக்காக மட்டும் செய்யாமல் நடைமுறையில் பயனளிக்கும் வகையில் வடிவமைத்து எந்த காலத்திலும் புதுமை மாறாமல் காப்பது எங்கள் நிறுவன நோக்கம்.

என் மனைவி எதைச் செய்தாலும் அதில் ஒரு கலை நுட்பம், தொழில் நுட்பம், கொஞ்சம் புதுமை இருக்க வேண்டும் என நினைப்பார். கட்டடக் கலைஞரும் கைவினைக் கலைஞர்களே. ஒரு கட்டடம் முடிக்கப்பட்ட பிறகே எங்களுடைய வேலைப்பாடுகள் தெரியவரும்.

சிவில் இன்ஜினியர்கள் ஒரு கட்டடம் கட்ட என்ன மாதிரியான கம்பிகள், சிமென்ட் கலவைகள் உபயோகிக்க வேண்டும் என திட்டமிடுவர். நாங்கள் அக்கட்டடம் அழகாக தெரியும் வகையில் என்னென்ன வடிவமைப்பில் அமைக்கலாம், கான்கிரீட், ஸ்டீல் தாண்டி வேறு பொருட்கள் கொண்டு எவ்வாறு கட்டலாம் போன்ற புதுமையான விஷயங்கள் குறித்து ஆராய்வோம். காற்றோட்டம், வெளிச்சம் எவ்வாறு இருக்க வேண்டும்; இயற்கையாகவே கட்டடத்தினுள் குளிர்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.
Latest Tamil News
2023ல் கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு ஜெயின் குடும்பத்திற்கு துாத்துக்குடியில் படகை கருப்பொருளாக வைத்து வீடு கட்டிக் கொடுத்தோம். வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் படகில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்தது. தேனியில் மலைகளை கருப்பொருளாக வைத்து வீடு அமைத்தோம். இரு வீடுகளும் பல விருதுகளை குவித்தன.

தற்போது பிரதமரின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சோழவந்தான், புதுக்கோட்டை, ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன்களை சீரமைத்து வருகிறோம். உட்கட்டமைப்பு வசதிகளையும் தாண்டி விமான நிலைய தரத்திற்கு வடிவமைக்கப்படுகிறது.

நாம் வாழும் இடம் தான் நம் மனநிலையை தீர்மானிக்கும். கொரோனா காலத்தில் சிறிய அறைக்குள் முடங்கியிருந்த நிலை இருந்தபோது அச்சிறிய அறையையும் எப்படி காற்றோட்டமாக, அழகாக வடிவமைக்க முடியும் என எங்கள் திறமையை வெளிப்படுத்தினோம் என்றார்.

இவர்களை வாழ்த்த 96778 49774

Advertisement