மனம் கவரும் மணல் ஓவியங்கள்: அசத்தும் பூ வியாபாரி

சென்னை தாம்பரத்தை சேர்ந்த பூ வியாபாரி ராஜூ 45, ஆற்று மணலை பயன்படுத்தி கண்ணாடியில் ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.

இவரது மணல் ஓவியங்கள் தத்ரூபமாக, பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

மணல் ஓவியர் ராஜூ கூறியதாவது: சிறுவயதில் இருந்தே படம் வரைவதில் ஆர்வம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கார்டூன்கள் பிரபலம். அதனை நேசித்து ஓவியங்கள் வரைய துவங்கினேன். குடும்ப சூழலால் டிகிரி படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்கு சென்றேன். ஆனாலும் ஓவியத்தின் மீதுள்ள ஈர்ப்பால் இரவில், ஓய்வு நேரங்களில் வரைந்து அதன் நுணுக்கங்களை கற்றுகொண்டேன். ஓவியக் கலையில் சாதிக்க வேண்டும் என முயற்சித்து மணல் ஓவியங்கள் வரைய துவங்கினேன்.
Latest Tamil News
மணல் ஓவியங்களை 1996 முதல் வரைந்து வருகிறேன். நடிகர் ரஜினி வீட்டில் நான் வரைந்த ஓவியம் இருப்பது எனக்கு பெருமை.

கண்ணாடியில், ஓவியம் வரையும் பக்கத்தில் கருப்பு நிற பெயிண்ட் அடிப்பேன். அதன் பிறகு வரைய வேண்டிய ஓவியத்தை 'க்ளூ'(பசை) மூலம் வரைவேன். 'க்ளூ' பசை காய்ந்து விடும் முன் நன்கு சலித்த மணலை அதன்மேல் துாவுவேன். ஓவியத்தில் முடி, கண், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை தெளிவாக காட்டுவதற்கு மெல்லிய ஊசிகளை பயன்படுத்துவேன்.
Latest Tamil News
அம்மா ராஜம் பூ வியாபாரம் செய்கிறார். அவருடன் இணைந்து பகலில் பூ வியாபாரம் செய்கிறேன். ஓவியங்களை இரவில் வரைவேன். வரையும் போது மனைவி மகாலட்சுமி, மகள் சஹான தேவையான உதவிகளை செய்கின்றனர்.
Latest Tamil News
ஒரு ஓவியத்தை முழுமையாக வரைந்து முடிக்க குறைந்த பட்சம் 3 நாட்கள் ஆகும். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஓட்டலில் வெங்கடாஜலபதி படம் வரைந்து வழங்கினேன். அவர்கள் இன்று வரை அந்த படத்தை வைத்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி ஓவியத்தை பார்த்து அலைபேசியில் வாழ்த்தியது மறக்க முடியாத தருணம். வெளிநாடுகளில் இருந்தும் மணல் ஓவியங்களை வரைய ஆர்டர் கொடுக்கின்றனர். மணல் ஓவியம் வரைய கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு ஓய்வு நேரங்களில் சொல்லி கொடுப்பேன் என்றார்.

இவரை வாழ்த்த 76676 65441

Advertisement