தொழில் முனைவோராக 15 வயதில் இலக்கு 5 ஆண்டுகளில் சாதித்த காயத்ரி
பதினைந்து வயதிலேயே தொழிலதிபர் ஆக வேண்டுமென்ற லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு, 20 வயதில் தொழிலை தொடங்கி பன்முக திறமையோடு பயணிக்கிறார் இளம் தொழில்முனைவோர் காயத்ரி கதிர்வேல்.
பேஷன் டிசைனர், ஓவியர், இன்டீரியர் டிசைனர், பயிற்றுநர், சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சர் என பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழும் காயத்ரி கதிர்வேல் உடுமலையைச் சொந்த ஊராகக் கொண்டவர். இவருக்கு சிறுவயதிலிருந்தே ஓவியம் மீது ஆர்வம் அதிகம். பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லுாரியில் பேஷன் டிசைனிங் படித்துக் கொண்டிருந்தபோது அதன் மீதான காதல், கட்டாயம் படிப்பு முடிந்ததும் சுய தொழில் தொடங்கும் எண்ணத்தை உருவாக்கியது. அப்பாவும் டெய்லர் என்பதால் இவருக்கு பேஷன் டிசைனிங் இயல்பாக வரத் தொடங்கியது.
தனது 'பொட்டிக்கை' உருவாக்க கல்லுாரி பருவத்திலிருந்தே ஓவியத்தை பயன்படுத்தி பணம் சேர்க்க தொடங்கியிருக்கிறார். கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போர்ட்ரேட் ஓவியம் வரைந்து கொடுத்து கிடைத்த வருமானத்தை சேர்த்து வைத்தார். கல்லுாரி நேரம் போக இதர நேரங்களில் ஸ்டிச்சிங் பணி செய்தார். தனது ஓவியத்தை சமூக வலைதளத்தில் பதிவிட வரவேற்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம், யு டியூப் மூலம் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், நாடுகள் என ஓவிய ஆர்டர்கள் வரத்தொடங்கின. இதன் மூலம் வருமானத்தை சேர்த்து 20 வயதிலேயே 'பொட்டிக்' கடையை திறந்தார். சின்ன பெண்தானே இவரிடம் கற்றுக் கொள்வதா, ஆர்டர் கொடுப்பதா என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தும் மனம் தளராமல் உழைப்பை கொடுத்ததால் பலன் நாளாக, நாளாக கிடைத்தது.
சேர்த்து வைத்த ரூ.20 ஆயிரம் பணத்தை அட்வான்ஸாகவும், ரூ.2 ஆயிரத்தை மாத வாடகையாகவும் கொடுத்து தொழிலை தொடங்கிய காயத்ரியின் இன்றைய பேஷன் டிசைனிங் இன்ஸ்டிடியூஷன் வாடகை ரூ.25 ஆயிரம். பேஷன் டிசைனிங், ஆரி வொர்க் செய்வதோடு 300க்கும் மேற்பட்டோருக்கு நேரடி, ஆன்லைன் பயிற்சி அளிக்கிறார். தன் ஊரைச் சுற்றியுள்ள பெண்களுக்காக பேஷன் இன்ஸ்டிடியூட் உருவாக்கும் லட்சியத்துடன் பயணிக்கும் காயத்ரி கதிர்வேல் கூறியதாவது:
படிக்கும்போதே முடிவெடுத்து விட்டேன் தொழில்முனைவோர் ஆக வேண்டுமென்று. என் பெயருக்கு பின்னால் மட்டுமல்ல எனக்கு பின்னாலும் அப்பா கதிர்வேலின் ஊக்கம் முக்கிய காரணமாக இருந்தது.
எடுத்தவுடன் இந்த இடத்திற்கு வரவில்லை. முயற்சியும், பயிற்சியும், கடின உழைப்பும் இருந்தால் முன்னேற்றத்திற்கு தடையிருக்காது என்றார்.