முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்த டாக்டர் செரியன் காலமானார்!
பெங்களூரு: இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்த பிரபல மருத்துவர் கே.எம்.செரியன், பெங்களூருவில் நேற்று காலமானார். இவருக்கு வயது 82.
இவர் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
கேரளாவின் காயம்குளத்தில் பிறந்த செரியன், வேலுார் கிறிஸ்துவ மருத்துவக்கல்லுாரியில் அறுவை சிகிச்சைப்பிரிவு விரிவுரையாளராக பணியை தொடங்கினார். 1970ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர், கார்டியோ தொராசிக் சர்ஜரியில் மேற்படிப்பை முடித்தார். நியூசிலாந்து, அமெரிக்காவிலும் பணியாற்றினார்.
பின்னர் இந்தியா திரும்பிய அவர், சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் நாட்டின் முதலாவது கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டினார்.
இவர் மருத்துவ துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் இரங்கல்
செரியனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற டாக்டர்களில் ஒருவரான கே.எம். செரியனின் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இதய மருத்துவத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் மகத்தானது, பல உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால மருத்துவர்களுக்கு வழிகாட்டவும் உதவும். தொழில்நுட்பம் மற்றும் புதுமை மீதான அவரது முக்கியத்துவம் எப்போதும் தனித்து நிற்கிறது. இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.