மதுரை கோட்டத்தில் 73 கோடி மகளிர்கள் விடியல் பயணம்: மேலாண் இயக்குநர் தகவல்

மதுரை: மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா இன்று (ஜன.,26) கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ரா.சிங்காரவேலு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுனர், நடத்துனர் பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி தலைமையுரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், ‛‛தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 3500 பேருந்துகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, இன்று சுமார் 21,000 பேருந்துகளுடன், இந்தியாவிலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழகமாக திகழ்கிறது. இக்கழகத்தின் சார்பில் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் 2400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மகளிர் விடியல் பயண திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது தினசரி 4.5 லட்சம் மகளிர்கள் பயணம் செய்து வந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து தற்போது 6.5 லட்சம் மகளிர்கள் தினசரி பயணம் செய்து வருகின்றனர். 2021 முதல் 2024 வரை 73 கோடி மகளிர்கள் பயணம் செய்து பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர். இந்நாள் வரை 702 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளே செல்லாத இடம் இல்லை என்ற வகையில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறோம்.

நம்முடைய போக்குவரத்து சேவையில் கிராமப்புற மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி ஆகியன மறுமலர்ச்சியை கண்டுள்ளது. இனிவரும் காலங்களில் எலக்ட்ரிக் பேருந்துகள் 100 மற்றும் பிஎஸ்-6 பேருந்துகள் 521 என மொத்தம் 621 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வருடந்தோறும் சிறந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்'' எனப் பேசினார்.

மேலும் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களை சார்ந்த சிறந்த கிளை மேலாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள், ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள், தூய்மை நலப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் என 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை பொது மேலாளர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, பி.மணி மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மதுரை கூட்டாண்மை சட்டம் மற்றும் நிர்வாகத் துறை உதவி மேலாளர் வி.சசிகுமார் நன்றியுரை கூறினார்.

Advertisement