தி.மு.க. என்றாலே நாடக கம்பெனி தான்; அண்ணாமலை தாக்கு
திருப்பூர்: 'தி.மு.க. என்றாலே, டிராமா கம்பெனி தான்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருப்பூரில் நடந்த விழாவில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
திருக்குறளை பற்றி நாம் எவ்வளவு பேசினாலும் போதுமானதாக இருக்காது. தமிழகத்தில் நாம் திருவள்ளுவர் பற்றி பேசுவதில்லை. திருக்குறள் சாதாரணமான நூல் கிடையாது. ஒரு குறளை ஒரு மனிதன், இரண்டு வரிகளில் ஏழு வார்த்தைகளால் எழுதுவது அவ்வளவு கடினம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
பின்னர், திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: தி.மு.க. என்றாலே, டிராமா கம்பெனி, நாடக கம்பெனி என்று சொல்வோம். இன்றைக்கு வேங்கை வயல் நிகழ்வுக்கு தமிழக போலீசார் எழுதியிருக்கும் திரைக்கதை வசனம் வந்து, கருணாநிதி எழுதக் கூடிய வசனத்தை மிஞ்சக்கூடிய வகையில் இருக்கிறது.
யாருமே நம்ப மாட்டார்கள். 900 நாட்களுக்கு பிறகு, இதை யாரும் நம்ப போவது இல்லை. இதன் மீது யாருக்கும் நம்பிக்கை இருக்க போவதில்லை. வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளை கடந்து நின்று கொண்டு இருக்கிறோம். இத்தனை நாள்கள் இல்லாமல் இப்போது வேங்கைவயல் விவகாரத்தில் ஆடியோ, வீடியோ வெளி வருகிறது.
அதிகாரம் இல்லை
போலீசாரின் குற்றப்பத்திரிகையை தி.மு.க.,வின் திரைக்கதை வசனமாக நாங்கள் பார்க்கிறோம். உள்ளத்தில் உங்களுக்கு பயம் இல்லை என்றால் எதற்காக சி.பி.ஐ., விசாரணை தடுக்கிறீர்கள். இன்றைக்கு கள்ளக்குறிச்சி வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவு படி சி.பி.ஐ., விசாரணை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
உண்மையாக வெளிப்படையாக இருக்கும் தி.மு.க., அரசாக நீங்கள் இருந்தால் ஏதற்கு சி.பி.ஐ., விசாரணையை தடுக்க வேண்டும். கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாவளவன் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொள்ளவில்லை. யாரின் கண்களை துடைக்க போலி செயல்களை தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது என்பதை அவர்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
3 தகுதிகள்
இன்றைக்கு தி.மு.க.,வில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றால், முதல் தகுதி படிக்காமல் இருக்க வேண்டும். தி.மு.க.,வில் அமைச்சராக இருக்க வேண்டும் என்றால் முதல் தகுதி பொய் சொல்ல வேண்டும். பெரிய அமைச்சராக இருக்க வேண்டும் என்றால் ஊழல் செய்ய வேண்டும். தி.மு.க.,வினர் ஊழல் செய்வதற்காக பிறந்தவர்கள்.
அடிப்படை அறிவு இல்லாதவர்கள். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை. சிலருக்கு சர்ச்சைக்குரிய கருத்தை பேசிதான் மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
தமிழகத்தில் என்ன விதமான அரசியல் நடக்கிறது என்றால், மேடையில் மைக் பிடித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசினால் மீடியாவில் இரண்டு நாட்கள் பேசுவார்கள் என்று நினைக்கின்றனர். இதனால் பயன் கிடைக்க போவதில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.