என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி
மைசூரு: 'முடா' வழக்கில் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, அமலாக்கத் துறை முயற்சி செய்வதாக, முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டி உள்ளார்.
மைசூரு நஞ்சன்கூடில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'முடா' வழக்கில் நானும், என் குடும்பத்தினரும் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டு இருப்பதாக பேசப்படுகிறது. அமலாக்கத் துறை வெளியிட்டது, விசாரணை அறிக்கை இல்லை; தற்காலிக பறிமுதல் தகவல் அறிக்கை.
'முடா' முன்னாள் கமிஷனர் நடேஷுக்கு, அமலாக்கத் துறை அளித்த சம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர் வீட்டில் சோதனை நடத்தியது, அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் செல்லாது என்று கூறி உள்ளது. வழக்கின் உண்மை அறிந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறு இல்லை
அமலாக்கத் துறையின் முழு அறிக்கையை ஊடகங்களில் வெளியிட்டதன் மூலம், என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பது தெளிவாக தெரிகிறது. 'முடா' வழக்கு, முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்டவிரோத பண பரிமாற்ற முயற்சிக்கு எந்த ஆதாரமும் இல்லை.
என் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதற்கு நீதிமன்றம் தடை விதித்த கோபத்தில், என்னை இழிவுபடுத்த முயற்சி நடக்கிறது. இதை செய்வோரின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.
முதல்வர் மாற்றம் குறித்து திரும்ப திரும்ப ஊடகத்தினர் என்னிடம் கேள்வி கேட்கின்றனர்.
கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உடன்படுவோம் என்பது என் பதில். இன்னும் எத்தனை முறை இந்த விஷயத்தை நான் தெளிவுபடுத்த வேண்டும். இரண்டு, மூன்று அமைச்சர்கள் ஒன்றாக சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. அமைச்சர்கள் விருந்து அளிப்பதிலும் தவறு இல்லை.
அரசு தீவிரம்
'கும்பமேளாவை விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தகுதியற்றவர்கள்' என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறி இருப்பது சிறுபிள்ளைத்தனமான கருத்து.
மத்திய பட்ஜெட்டில் இருந்து மாநிலத்திற்கு நாங்கள் புதிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. முந்தைய பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினால் போதும். பத்ரா மேலணை திட்டத்திற்கு 5,300 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
மத்திய அரசுக்கு, கர்நாடகா 4 லட்சம் கோடி ரூபாய் வரி செலுத்துகிறது. ஆனால் எங்களுக்கு 60,000 கோடி ரூபாய் மட்டுமே திரும்ப வருகிறது. வரி பங்கீட்டில் மாநிலத்திற்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. மக்கள் எங்கிருந்து கடன் பெற முடியுமோ, அங்கிருந்து கடன் வாங்குகின்றனர். தனியார் நிதி நிறுவனங்கள் கடன்களுக்கு அதிக வட்டி வசூலிப்பதுடன், வட்டி செலுத்தாத மக்களை மிரட்டி வருகின்றன. கடனை வசூலிக்க மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுகின்றன.
கடனுக்கு 28 முதல் 30 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. நிதி நிறுவனங்கள் கொடுக்கும் தொல்லையால் மக்கள் தற்கொலை செய்வதை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி, அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும். நிதி நிறுவனங்களுக்கு பயந்து மக்கள் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.