'துறையின் முக்கியத்துவம் தெரிந்து தான் மகேஷ் செயல்படுகிறாரா'

சென்னை:'உண்மையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், தன் துறையின் முக்கியத்துவம் தெரிந்து தான் செயல்படுகிறாரா; இதே நிலை தொடர்ந்தால் தமிழகம், நாட்டில் கல்வியில் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக, வரிசைபடுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

கிராமப்புற பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த அறிக்கையின்படி, தமிழகம் பல பிரிவுகளில், பிற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, விளம்பரம் செய்வதில் மட்டுமே, 'நம்பர் ஒண்ணாக' இருக்கும் டிராமா மாடல் தி.மு.க., அரசு, தமிழகத்தின் கல்வித் தரம் குறித்து கூறி வருவதற்கு நேர் மாறாக, அறிக்கையின் புள்ளி விபரங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில், 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில், 17,337 வீடுகளில், 28,984 பள்ளி குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த, 2018ல் 59.90 சதவீத பள்ளிகளில், மாணவர்களுக்கு போதுமான அளவு ஆசிரியர்கள் இருந்தனர். தற்போது, மாணவர் - ஆசிரியர் விகிதத்தில், தமிழகத்தில் வெறும், 51.80 சதவீத பள்ளிகளாக குறைந்து, இந்தியாவிலேயே கடைசி வரிசையில் இருக்கிறது.

உண்மையில் பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர், தன் துறையின் முக்கியத்துவம் தெரிந்து தான் செயல்படுகிறாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

பழுதடைந்த பள்ளி கட்டடங்களை சரி செய்யவில்லை. தி.மு.க., அரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் செயல்படாத போக்கு தொடருமானால், அடுத்த 20 ஆண்டுகளில், தமிழகம் நம் நாட்டில் கல்வியில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக வரிசைபடுத்தப்பட்டாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement