தவறவிட்ட சூட்கேசில் ரூ.10 லட்சம் தங்கம், வைரம்

2




திருச்சி: இரு ரயில் பயணியர் சூட்கேசை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்தில், ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டதால், 10 லட்சம் ரூபாய் மதிப்பு தங்க, வைர நகைகள் உரியவருக்கு கிடைத்தது.


சென்னையில் இருந்து திருச்சிக்கு, ஜன., 29ல் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி காசிநாதன் பயணித்தார். அவர், திருச்சி ரயில் நிலையத்தில் இறங்க முயன்றபோது, தன் சூட்கேசை யாரோ மாற்றி எடுத்துச் சென்றது தெரிந்தது.


அவர் திருச்சி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். துரிதமாக செயல்பட்ட போலீசார், காசிநாதன் வந்த ரயில் பெட்டியில் பயணம் செய்தவர்கள் பட்டியலை எடுத்து, ஒவ்வொருவராக தொடர்பு கொண்டு விசாரித்தனர்.


இதில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜகோபால், சூட்கேசை மாற்றி எடுத்துச் சென்றது தெரிந்தது. அவரை நேரில் வரவழைத்த போலீசார், இரு சூட்கேஸ்களையும் திறந்து, யாருடையது என உறுதி செய்தனர்.


பின், அவரவர் சூட்கேஸ்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதில், ராஜகோபால் சூட்கேசில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், பட்டுப்புடவைகள் இருந்தன. அவற்றை நேர்மையாக ஒப்படைத்த காசிநாதனை, ரயில்வே போலீசார் பாராட்டினர். துரித நடவடிக்கை எடுத்த ரயில்வே போலீசாரையும் அனைவரும் பாராட்டினர்.

Advertisement