அலைபேசி பறிமுதல் விவகாரத்தில்... சிறப்பு புலனாய்வு குழு மீது டி.ஜி.பி.,யிடம் புகார்
சென்னை:சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை குறித்து, கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதை போலீசார், சி.சி.டி.என்.எஸ்., எனப்படும், குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைப்பின்னல் என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். அதை சிலர் பதிவிறக்கம் செய்து, 'வாட்ஸாப்'பில் பரப்பி உள்ளனர். இதுதொடர்பாக, செய்தியாளர்கள், 13 பேருக்கு, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பினர்.
விசாரணைக்கு ஆஜரான மூன்று செய்தியாளர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம், 'உங்களுக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன; மனைவியர் எத்தனை பேர்; அவர்களிடம் நகைகள் எவ்வளவு உள்ளன; இந்த, எப்.ஐ.ஆர்., நகலை பரப்பி, எவ்வளவு ரூபாய் சம்பாதித்தீர்கள்' என்றெல்லாம் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக, சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள், டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம் நேற்று முன்தினம் மனு அளித்தனர்.
அப்போது, 'சிறப்பு புலனாய்வு குழுவை, சென்னை உயர் நீதிமன்றம் அமைத்து இருப்பதால், அவர்களின் விசாரணையில் நான் தலையிட முடியாது' என்ற டி.ஜி.பி., தனிப்பட்ட ரீதியான கேள்விகளை தவிர்க்குமாறு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மன்ற நிர்வாகிகள், சென்னை எழும்பூரில் புலனாய்வு குழு அதிகாரிகளை சந்தித்து நேற்று மனு அளித்தனர். அப்போது, 'நாங்கள் சட்ட ரீதியாகவே செயல்பட்டு வருகிறோம்' என, அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நேற்று விசாரணைக்கு ஆஜரான செய்தியாளர்கள் நான்கு பேரிடம், மொபைல் போன்களை பறிமுதல் செய்யவும் முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள், மன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.