கெங்குவார்பட்டி பேரூராட்சி கூட்டம் கோரம் இன்றி ஒத்திவைப்பு தி.மு.க., அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் போர்க்கொடி
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி பேரூராட்சி கூட்டத்தை 8 தி.மு.க., 3 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தால் கோரமில்லை என செயல்அலுவலர் இளங்கோவன் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த தமிழ்ச்செல்வி உள்ளார். துணைத்தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த ஞானமணி உள்ளார். இங்குள்ள 15 வார்டுகளில் தி.மு.க.,10, அ.தி.மு.க., 3, ம.தி.மு.க.,1, சுயேச்சை 1 என கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். தலைவர், துணைத் தலைவர் இடையே சுமூகமான உறவு இல்லாததால் ஜன., 29ல் துணைத் தலைவர் ஞானமணி தலைமையில் 7 தி.மு.க., கவுன்சிலர்கள் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் தலைமையில் துவங்கியது. செயல் அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ம.தி.மு.க., கவுன்சிலர் பவானி, தி.மு.க., கவுன்சிலர் ராஜவேல், சுயேச்சை கவுன்சிலர் ராமர் ஆகிய 4 பேர் மட்டும் கூட்டத்திற்கு வந்து கையெழுத்திட்டனர்.
சிறிது நேரத்தில் ராஜவேல் வெளியேறினர். அங்கு வந்த தி.மு.க., கவுன்சிலர்கள் பொன்மணி, சாந்தி, இக்பால்நிஷா, பெருமாயியம்மாள் ஆகியோர் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை செயல்அலுவலரிடம் கொடுத்து கூட்டத்தை புறக்கணித்தனர். செயல் அலுவலர் கூறுகையில்,'கூட்டத்திற்கு 4 பேர் மட்டுமே வந்தனர். கோரமில்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது,' என்றார்.-