திருப்புத்துாரில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஆர்வம்
திருப்புத்துார்: திருப்புத்துாரில் பாரம்பரிய கருப்பு கவுனி நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
திருப்புத்துார் பகுதியில் கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு நெல்சாகுபடி அதிகமாக இருந்தது. மேலும் நல்ல மகசூலுடன் பெரும்பாலான வயல்களில் அறுவடை முடிந்துவிட்டது. அதில் பாரம்பரிய நெல்சாகுபடியில் பலர் ஆர்வம் காட்டியது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கருப்புக்கவுனி மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் சாகுபடியை 60 ஏக்கர் அளவில் விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர். நான்கரை மாதம் முதல் ஆறு மாதப்பயிராக உள்ள பாரம்பரிய நெல்களை இயற்கை விவசாயமாக இவர்கள் செய்துள்ளனர்.
அரியிட்டானேந்தல் கருப்புராஜ் கூறுகையில்,நான் ஒன்றரை ஏக்கரில் கருப்புக்கவுனி சாகுபடி செய்துள்ளேன். அறுவடை நிலையில் உள்ளது. தொழி ஓட்டிய நாற்றங்காலில் 24 மணி நேரம் வெளிச்சம் படாத அறையில் நீரில் ஊறவைத்து, முளைவிட்டபின் நடவு செய்தோம். ஏக்கருக்கு 12 லிருந்து 15 கிலோ அளவிலான விதைகள் நடவு செய்தோம்.
21 நாட்களில் வளர்ந்த நாற்றுக்களை பிடுங்கி 1 அடி இடைவெளியில் வயலில் நடவு செய்தோம். இடையே பஞ்சகாவ்யம் தெளித்தோம். கதிர் பரியும் போது பூச்சி தாக்குதலை சமாளிக்க தேமோகரைசல் தெளிக்கப்பட்டது. தற்போது நன்றாக பரிந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. சிவகங்கை மாவட்ட அளவில் கருப்புக்கவுனி அரிசிக்கான புவிசார் குறியீடை பெற கருப்புக்கவுனி பாதுகாப்பு மற்றும் உழவர் உற்பத்தி சங்கம் சார்பில் நபார்டு மூலம் முயற்சி எடுத்துள்ளோம்.' என்றார்.
மற்ற ரக நெல் விலை எதிர்பார்த்த அளவில் போகாத நிலையில், கருப்புக் கவுனி நெல் கி ரூ 70க்கும் அரிசி ரூ 180 லிருந்து ரூ 200 வரை விலை போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த சாகுபடியில் மேலும் அதிகமாக விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடிக்கு மாற வேளாண்துறையினர் அதற்கான பயிற்சி,நெல் விதை அளிக்க விவசாயிகள் கோரியுள்ளனர்.