மானாமதுரை - தஞ்சாவூர் ரோட்டில் தடுப்பு இல்லாததால் தொடர் விபத்து
மானாமதுரை: மானாமதுரை - தஞ்சாவூர் ரோட்டில் பெரும்பாலான இடங்களில் தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகின்றனர்.
மானாமதுரையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் ரோடு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இருவழிச் சாலையாக மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த ரோட்டில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மானாமதுரையில் இருந்து சிவகங்கை வரை தற்போது ரோட்டில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோயில் எதிர்புறம் உள்ள வைகை ஆறு மேம்பாலத்திலிருந்து கல்குறிச்சி,சிப்காட் பகுதியில் ரோட்டின் இரு புறங்களிலும் மிகப்பெரிய பள்ளங்கள் இருப்பதால் அப்பகுதியில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது: இப்பகுதியில் ரோட்டை ஒட்டி பெரிய பள்ளங்கள் உள்ளது.இரவில் வாகனங்களில் வரும்போது ரோட்டை விட்டு கீழே இறங்கினால் பள்ளத்தில் சரிந்து கவிழும் அபாயம் உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மானாமதுரை சிப்காட்டை ஒட்டியுள்ள ரோட்டில் கேரளாவில் இருந்து தார் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ரோட்டை விட்டு பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இப்பகுதியில் ரோட்டின் ஓரத்தில் தடுப்புஅமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.