கண்மாய்களை காக்க வேண்டியது அதிகாரிகள் கடமை பொதுப்பணித்துறையினரை கடிந்த கலெக்டர்   

சிவகங்கை: பொதுப்பணித்துறை கண்மாய்கள், அத்துறைக்கு சொந்தமானது. அதை பாதுகாக்க வேண்டிய கடமை அத்துறை அதிகாரிகளுக்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், அத்துறை அதிகாரிகளை கலெக்டர் கடிந்து கொண்டார்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். இணை (வேளாண்மை) இயக்குனர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் பிரபா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரி, பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ், கோட்டாட்சியர் விஜயகுமார், துணை கலெக்டர் ரங்கராஜன் பங்கேற்றனர்.விவாதம் வருமாறு:

கலெக்டர்: மாவட்டத்தில் இது வரை 50 நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இன்னும் 30 இடங்களில் அமைக்க, விவசாயிகள் விருப்ப மனு தரலாம்.

அய்யாச்சாமி, கீழநெட்டூர்: வைகை ஆற்று கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு வழங்கிய மனுவிற்கு, சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அளித்த பதிலில், தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி பதில் தருமாறு எனக்கே தகவல் தருகின்றனர்.

ஆதிமூலம், திருப்புவனம்: புவிசார் குறியீடு பெற்ற இளையான்குடி முண்டு மிளகாயை வைத்து, சிவகங்கை ஸ்பைசஸ் பூங்காவில், மிளகாய் உப பொருட்கள் தயாரிக்கலாம்.

கலெக்டர்: சிவகங்கை முத்துப்பட்டி ஸ்பைசஸ் பூங்காவில் ஏற்கனவே 5 தொழில் நிறுவனம் செயல்படுகிறது. தொடர்ந்து தொழில் துவங்க முன் வர வேண்டும்.

ராதாகிருஷ்ணன், பெரியகண்ணனுார்: இளையான்குடி அருகே செம்பனுார், பெரியகண்ணனுார் உள்ளிட்ட பகுதிகள் காளையார்கோவில் வட்டத்தில் வருகிறது. எங்கள் கிராமங்களில் இருந்து காளையார்கோவிலுக்கு பஸ்சின்றி, சிவகங்கை சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது.

கமலக்கண்ணன், விட்டனேரி: விவசாய மின் மோட்டாருக்கு இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து பல ஆண்டு காத்திருக்கிறோம். ஆனால், விண்ணப்பிக்காத விவசாய கிணறுகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் முறைகேடாக இலவச மின் இணைப்பு தருகின்றனர்.

போஸ், அம்பலத்தாடி: திருப்புவனம் ஒன்றியத்தில் கூட்டுகுடிநீர் குழாய் இணைப்பிற்காக தோண்டிய ரோட்டை மீண்டும் புதுப்பிக்காமல் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

பாரத்ராஜா, திருப்புவனம்: சிராவயல் மஞ்சுவிரட்டிற்கு சென்ற மாடு கம்பனுார் கண்மாய் நீரில் மூழ்கியும், அதன் உரிமையாளரும் இறந்து விட்டனர். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

வழக்கறிஞர் ராஜா, மணல்மேடு: மாவட்டத்தில் தனியார் கைவசம் உள்ள அரசின் சமுதாய கிணறுகளை மீட்க கலெக்டர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மடப்புரத்தில் பல கோடி ரூபாயில் கட்டிய வணிக வளாகம் திறக்காததால், ரோட்டில் கடை வைத்து ஆக்கிரமிக்கின்றனர்.

வழக்கறிஞர் கோபால், திருப்புவனம்: பனையனேந்தல் கண்மாய்க்குள் ஆக்கிரமித்துள்ளவர்கள், கரையை உடைத்து தண்ணீரை வீணாக்கி விட்டனர். சம்பந்தபட்டவரின் பெயரை குறிப்பிட்டு போலீஸ் நடவடிக்கைக்கு பரிந்துரைக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வி.ஏ.ஓ., கடிதம் எழுதினார். ஆனால், அந்நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

கலெக்டர்: கண்மாய்கள் பொதுப்பணித்துறையினர் சொத்து. அதை பாதுகாக்க வேண்டிய கடமை அத்துறை அதிகாரிகளுக்கு உண்டு. அதை செய்யாமல் வி.ஏ.ஓ., தனிநபர் பெயரில் புகார் செய்தும், ஏன் அவர் பற்றி போலீசில் புகார் அளிக்கவில்லை.

கோபால், தேளி, திருப்புவனம்: தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கால்நடை வளர்ப்பு கடன் தொகையை முதல்வர் ஸ்டாலினிடம் பெற 16 பேரை பரிந்துரைத்து, 11 பேருக்கு தான் கடன் வழங்கியுள்ளனர். எஞ்சிய 5 பேருக்கு ஏன் வங்கியில் கடன் தர மறுக்கின்றனர்.

கூட்டுறவு இணை பதிவாளர்: விசாரித்து கால்நடை பராமரிப்பு கடன் பெற்றுத்தரப்படும்.

கருப்பையா, சிறுசெங்குளிபட்டி: சிவகங்கை தாலுகாவில் பிளாட் போட்டு விற்றவர்களிடம் இடம் வாங்கிய நடுத்தர மக்கள் பட்டா கேட்டு சென்றால், நீர்பிடிப்பு பகுதி என பொய்யான தகவலை கூறி தாசில்தார் அலைக்கழிப்பு செய்கிறார், இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement