வாழை இலை ஒரு கட்டு ரூ.1600

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி வாழை மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்புவனம் தாலுகாவில் 376 எக்டேரில் திருப்பாச்சேத்தி, கானுார், கல்லுாரணி, கலியாந்துார், மடப்புரம், வேம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு வாழை, ஒட்டு வாழை, கற்பூரவல்லி உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. மேலுார், கோட்டநத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை கன்றுகள் வாங்கி வந்து ஏக்கருக்கு ஆயிரம் கன்று வீதம் நடவு செய்யப்படுகிறது.

நடவு செய்த ஆறு மாதத்தில் இருந்து பக்க கன்றுகள் மூலம் வாழை இலை அறுவடை வாரம் ஒருமுறை நடைபெறுகிறது.

ஏக்கருக்கு நான்கு கட்டு ( ஒரு கட்டு 200 இலை) வரை கிடைக்கும், திருப்பாச்சேத்தி சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் வாழை இலைகள், வாழை பழங்கள், மரங்கள் திருப்பாச்சேத்தி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வியாபாரி ராஜேந்திரன் கூறுகையில்: பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் இல்லாததால் வாழை இலைகள் விளைச்சல் சரிவை சந்தித்துள்ளது. தினசரி 500 கட்டு இலைகள் வரும் இடத்தில் 100 கட்டுகளே வருவதால் விலை கூடியுள்ளது.

கடந்த மாதம் வரை ஒரு கட்டு 500 ரூபாய் என விற்பனை செய்த நிலையில் தற்போது ஆயிரத்து 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. தொடர் முகூர்த்தம், தைப்பூசம், மாசிகளரி என்பதால் இன்னமும் விலை கூடும், வெயில் அடித்தால் வாழை இலை விளைச்சல் அதிகரிக்கும் விலையும் குறையும், இல்லாவிட்டால் இன்னமும் அதிகரிக்க வாய்ப்புண்டு, என்றார்.

விவசாயி கானுார் ரகுராமன் கூறுகையில்:

வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது.

இப்பகுதி சுண்ணாம்பு பாறைகள் இல்லாத பகுதி என்பதால் இங்கு விளையும் வாழை இலைகள் பத்து நாட்கள் வரை வாடாது எனவே மதுரை மார்க்கெட்டில் திருப்பாச்சேத்தி வாழை இலைகளை விரும்பி வாங்குவார்கள், விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைந்துள்ளது. எனவே விலை உயர்ந்துள்ளது. இந்த மாதம் முகூர்த்த நாட்கள் இருப்பதால் தற்போது அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு இது நல்ல லாபத்தை கொடுக்கும், ஐந்து ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளேன். ஏக்கருக்கு நான்கு கட்டுகள் அறுவடை செய்யும் இடத்தில் இரண்டு கட்டுகளே அறுவடை செய்ய முடிந்துள்ளது என்றார்.

வாழைப்பழங்கள் விலை உயர்ந்த நிலையில் வாழை இலைகளின் விலையும் உயர்ந்துள்ளதால் வாழை விவசாயிகளுக்கு இது ஓரளவிற்கு லாபம் கிடைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

Advertisement