அண்ணாதுரை போல் மிமிக்ரி செய்த சீமான்! ஓட்டு வேட்டையில் கலகலப்பு

13

ஈரோடு: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை போல், பிரசார மேடையில் சீமான் பேசியதை தொண்டர்கள் ரசித்துக் கேட்டனர்.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார்.


பிரசார மேடையில் அவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை போன்று மிமிக்ரி செய்து காட்டி தொண்டர்களை குஷிப்படுத்தினார். அவர் பிரசாரத்தில் பேசியதாவது;


ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் மதிப்புமிக்க உரிமை, கடைசி வாய்ப்பு ஓட்டு போடுவது. காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு ரூபாய் என ஓட்டுக்கு காசு கொடுத்தார்கள் என்று கூறுகின்றனர். அதை முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசினார்.


காங்கிரசார் (அண்ணாதுரை குரலில் பேசுகிறார்) ஓட்டுக்கு காசு கொடுப்பானேன். அந்த காசை வாங்கிக் கொண்டு என்னிடத்தில் ஒட்டு போட வேண்டும் என்று ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிற வெங்கடாசலபதியை அழைத்துக் கொண்டு அந்த பணத்தில் அடித்து சத்தியம் வாங்குவானேன் இந்த காங்கிரசார் என்று அண்ணாதுரை பேசியது இருக்கிறது.


அந்த காங்கிரசாருக்கு சேர்த்து அண்ணாதுரை பெயரை சொல்லி ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்கும் வேலையை செய்வதுதான் இந்த திராவிடம். தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பானா? என்று அண்ணாதுரை சொல்கிறார்.


அந்த மதிப்புமிக்க தங்கத்தை தவிட்டுக்கு வாங்குவது திராவிடம். அம்பேத்கர் அன்றைக்கு மதிப்புமிக்க ஓட்டுகளை சில ரொட்டி துண்டுகளுக்காக விற்பது அவமானம் என்றார்.


ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி, அந்த காசை வாங்கி கொண்டு ஓட்டு போடுபவன் தேசத்துரோகி என்று முத்துராமலிங்கத்தேவர் கூறியிருக்கிறார்.


ஜனநாயகத்தை கேடுகெட்ட பணநாயகத்துக்கு அடமானம் வைப்பது என்பது போராடி விடுதலை பெற்று தந்த நமது முன்னோர்களை அவமதிப்பதற்கு சமமாகி விடும். இவ்வாறு சீமான் பேசினார்.

Advertisement