சென்னை ஈ.சி.ஆர்.,யில் பெண்களை துரத்திய சம்பவம்: 4 பேருக்கும் பிப்.,14ம் தேதி வரை சிறை
சென்னை: சென்னை ஈ.சி.ஆரில் காரில் சென்ற பெண்களை துரத்திய சம்பவத்தில், கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும், பிப்.,14ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை கானத்துாரை சேர்ந்த, 26 வயது பெண், தன் தோழியருடன், ஜனவரி, 25ம் தேதி, அதிகாலை, 2:00 மணிக்கு, கோவளத்தில் இருந்து தன் வீட்டிற்கு சென்றார். அவர்கள் சென்ற காரை, தி.மு.க., கொடி கட்டிய இரண்டு கார்களில் வந்த எட்டு வாலிபர்கள் பின் தொடர்ந்தனர்.இரண்டு கார்களிலும் வந்த வாலிபர்கள், முட்டுக்காடு பாலம் அருகே தங்கள் கார்களை சாலையின் குறுக்கே நிறுத்தி, பெண்கள் சென்ற காருக்கு வழி விடாமல் தடுத்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய பெண்கள், வீட்டிற்கு செல்ல வேகமாக காரை இயக்கினர். அப்போதும் விடாமல், இரண்டு கார்களில் துரத்திய வாலிபர்கள், பனையூரில் பெண் ஒருவரின் வீடு வரை சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து, கானத்துார் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். வாலிபர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் பெருங்களத்துார், இரும்புலியூரில் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். தனியார் கல்லுாரி மாணவர் உட்பட, 4 பேரை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். காரில் சென்ற பெண்களை, 2 கார்களில் சென்ற, 7 பேர் துரத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இன்னும் 3 பேர் கைது செய்யப்படாமல் இருக்கின்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும், பிப்.,14ம் தேதி வரை சிறையில் அடைக்க, சோழிங்கநல்லூர் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.