திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து விபத்து! கண்ணாடிகளை உடைத்து உயிர்தப்பிய பயணிகள்
திருச்சி; திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஆம்னி பஸ் ஒன்று நேற்று(ஜன.31) புறப்பட்டது. தொலைதூர பயணம் என்பதால் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வந்த போது ஆம்னி பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. அதே வேகத்தில் அருகில் இருந்த 30 அடி பள்ளத்தில் பாய்ந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பஸ் முழுவதும் தீ பரவ ஆரம்பித்தது. இதை அறிந்த பயணிகள் அனைவரும் அவசரம், அவசரமாக பஸ்சின் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே குதித்து உயிர்தப்பினர்.
இருப்பினும், இந்த விபத்தில் 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீப்பிடித்ததில் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.
தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.