சிவகங்கை அருகே கொடி அகற்றம் அதிகாரிகள் பாராட்டு 

சிவகங்கை: சிவகங்கை அருகே சாமியார்பட்டியில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி மக்களே முன்வந்து கொடி, விளம்பர பலகைகளை அகற்றினர். அவர்களுக்கு வருவாய், போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சி, ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிகளை 12 வாரத்திற்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஸ் ராவத் உத்தரவுபடி அரசு, பொது இடத்தில் வைத்துள்ள அரசியல் கட்சி, ஜாதி, மத அமைப்பு கொடி கம்பங்கள், பலகைகள் குறித்து மாவட்ட அளவில் போலீசார் கணக்கெடுப்பு நடத்தினர்.

இம்மாவட்டத்தில் அரசியல் கட்சி, ஜாதி, மத அமைப்பு சார்ந்து 500க்கும் மேற்பட்ட பலகைகள், 300க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். அவற்றை அரசியல் கட்சியினர், ஜாதி, மத அமைப்பினர் தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மக்களே முன் வந்து அகற்றம்



சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, சிவகங்கை அருகே சாமியார்பட்டி மக்கள் மற்றும் யாதவ மகாசபையினர் தாங்களே முன்வந்து நாடகமேடை முன் அமைக்கப்பட்டிருந்த, மகாசபை பலகை மற்றும் கொடிகம்பத்தை அகற்றினர்.

சாமியார்பட்டி யாதவ மகாசபை நிர்வாகிகளுக்கு கோட்டாட்சியர் விஜயகுமார், கூடுதல் எஸ்.பி.,பிரான்சிஸ், தாசில்தார் சிவராமன், வருவாய் ஆய்வாளர் பிரபு உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். இதுபோன்று அரசியல் கட்சியினர், ஜாதி, மத அமைப்பினர் தாங்களே முன்வந்து பலகைகள், கொடி கம்பங்களை அகற்றி, சட்ட ரீதியான நடவடிக்கையில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Advertisement