கண்டுகொள்ளாத குளம், குட்டையால் நிலத்தடி நீர் கேள்விக்குறி: சிங்கம்புணரியில் ஆக்கிரமிப்பை அகற்ற தயக்கம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் சிறு குளம், குட்டைகள் மறைந்து வரும் நிலையில் நிலத்தடி நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குளம், குட்டை, ஏந்தல்கள் உள்ளன. மழைக்காலங்களில் ஓடிவரும் தண்ணீர் இவற்றில் தேக்கப்பட்டு அதுவே அப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்திற்கான மூல ஆதாரமாக விளங்குகிறது. இந்த நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் 50 முதல் 100 அடிக்கு உள்ளாகவே தண்ணீர் கிடைத்தது. பல நீர்நிலைகள் கவனிப்பாரின்றி போனதால் அவை மூடப்பட்டு விட்டது. கால்வாய்களும் மறைந்து நீர்வரத்தும் குறைந்து போனது. ஆவணங்களில் மட்டும் பெயரளவுக்கு ஏராளமான நீர்நிலைகள், கால்வாய்கள் இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் அவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் எழும்பியுள்ளது.

மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் ஓடியும் கூட நிலத்தடி நீர் மட்டும் பல கிராமங்களில் உயரவில்லை. பழ.வெங்கடேஸ்வரன், சமூக ஆர்வலர், மருதிப்பட்டி; இயற்கை மழைநீர் தொட்டிகளாக விளங்கும் சிறு குளம், ஊருணி, ஏந்தல்கள் பராமரிப்பில்லாததால் கிராமங்களில் நிலத்தடிநீர் மட்டம் மேம்படவில்லை. பல ஊருணிகளில் தடுப்புச் சுவர் இல்லாமலும், வரத்துக்கால்வாய் இல்லாமலும் தண்ணீர் வீணாகி வருகிறது. பெரிய மழை பெய்தால் கூட பல நீர்நிலைகளை தண்ணீர் சென்று சேர முடியவில்லை. அனைத்து நீர்நிலைகளையும், வரத்துக்கால்வாய்களையும் சீரமைத்து முறையான தடுப்புகளை அமைக்க வேண்டும்.

Advertisement