18 நலவாரியங்களில் சேருங்க தொழிலாளர்களே: சலுகைகள் குறித்து விழிப்புணர்வு இல்லை

தமிழக தொழிலாளர் நலத்துறையின் கீழ் 18 நலவாரியங்கள் உள்ளன. கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுனர்கள், வாகனங்கள் பழுது பார்ப்போர், முடிதிருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர், தையல் தொழிலாளர் உட்பட பல்வேறு தொழிலாளர்களுக்கு தனித்தனியே உள்ளன.

இத்தகைய தொழிலாளர்கள் ஏதேனும் ஒரு அமைப்பின் கீழ் வேலை பார்க்காமல், தினக்கூலிகளாக இருப்பர். அவர்களுக்கென இ.எஸ்.ஐ., போன்ற சலுகைகள் இருக்காது.

எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வாரியம் செயல்படுகிறது. இவர்களில் 18 முதல் 60 வயதுக்குட்பட்டோர் இதில் பதிவு செய்யலாம்.

இதன் மூலம் அவர்களின் 2 குழந்தைகளுக்கு 6 முதல் பட்ட மேற்படிப்பு வரை கல்வி உதவித் தொகை பெற முடியும். 6 முதல் 9ம் வகுப்பு வரை ரூ.ஆயிரம், மேல்நிலையில் ரூ.2400, கல்லுாரியில் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

தவிர இயற்கை மரணம் அடைந்தால் ரூ.50 ஆயிரம், விபத்தில் இறந்தால் ரூ. 2 லட்சம், ஊனமடைந்தால் ரூ. 1 லட்சம், பணியின் போது இறந்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்.

இதுபோல திருமணம், மகப்பேறு மருத்துவம், கண் கண்ணாடி, ஓய்வூதியம், வீடு வசதி, கட்டுமான தொழிலாளர்கள் எனில் குடும்ப ஓய்வூதியம் போன்ற சலுகைகளும் உள்ளன.

இத்தனை இருந்தும் அமைப்பு சாராமல் அன்றாட கூலிகளாக பணியாற்றுவோருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் வாரியத்தில் பதிவு செய்வது சுணக்கமாக, குறைவாக உள்ளது.

எனவே தொழிலாளர் நல, சமூகபாதுகாப்பு திட்ட உதவிகமிஷனர் பாரி ஆலோசனைப்படி, இத்துறையினர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் ஸ்டால் அமைத்தும் பதிவு மேற்கொள்கின்றனர்.

அலுவலகங்கள், கிராமங்களிலும் அவ்வப்போது பதிவு நடக்கிறது. தவிர பணி நடக்கும் இடங்களுக்கே சென்றும் பதிவு செய்கின்றனர். இருப்பினும் இன்னும் பலர் இதில் சேராமல் உள்ளனர்.

தொழிலாளர் நலத்துறையினர் கூறுகையில், ''மாவட்ட அளவில் 3 லட்சத்திற்கும் மேல் இதில் சேர்ந்துள்ளனர். இன்னும் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் பதிவு செய்யாமல் இருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய தொழிலாளர்கள் பலர் தேவையான ஆவணங்களை வைத்திருப்பதில்லை. அவர்களை தேடி கண்டுபிடித்து பதிவு செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது.

தன்னார்வலர்கள் இதுபோன்ற தொழிலாளர்கள் சலுகைகளை பெற உதவலாம்'' என்றனர்.

Advertisement