பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு 37 இடங்களில் மருத்துவ முகாம்கள்
பழநி: பழநி கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி சுகாதார மாவட்டம் மூலம் பாதயாத்திரை பக்தர்கள் வரும் வழியில் 37 இடங்களில் நிலையான மருத்துவ முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழா பிப். 11 ல் நடக்கிறது . இதை தொடர்ந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பழநி சுகாதார மாவட்டத்தில் 19 , திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் 18 என 37 நிலையான மருத்துவ முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு டூவீலர் ஆம்புலன்ஸ், இரண்டு 108 ஆம்புலன்ஸ், 4 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பழநி கோயிலில் நான்கு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பழநி கோயில் சார்பிலும் மருத்துவ குழுக்கள் அமைக்க உள்ளனர்.
பழநி மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா கூறுகையில், பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தேவையான மருந்துகள் நிலையான மருத்துவ முகாம்களில் வைக்கப்படும். நீர்ச்சத்துக் குறைவு ,கால் வலி போன்றவற்றிற்கு உடனடி தீர்வு காண மருத்துவ மையங்கள் உதவியாக இருக்கும். 108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத இடங்களில் டூ வீலர் ஆம்புலன்ஸ் சென்று மருத்துவ உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் குடிநீர், உணவு ஆகியவற்றில் சுகாதாரம் கண்டறிந்து உட்கொள்ள வேண்டும். சாலையோரங்களில் படுத்து துாங்குவதை தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் ஓய்வு எடுக்க வேண்டும் ''என்றார்.