இ.சி.ஆரில் வைக்கப்படும் பேனர், கொடி கம்பங்களால் விபத்து அபாயம்

புதுச்சேரி: இ.சி.ஆரில் வரவேற்பு பேனர்களுடன், இரும்பு பைப்பிலானகட்சி கொடிக்கம்பங்கள் நடப்படுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பேனர் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொது மக்களும் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு சாலைகளின் நடுவே போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் மற்றும் கட்சி கொடிக்கம்பங்களை சமீபகாலமாக வைப்பது அதிகரித்துள்ளது.

உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்கள் குறித்து, போலீசார் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், புதிது புதிதாக சாலையில் பேனர்கள் முளைத்து வருகின்றன. பேனர் கலாசாரத்தால், விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்ட கொடுமைகளும் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரத்தில், கோர்ட் பல முறை உத்தரவுகளை பிறப்பித்தும், யாரும் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், புதுச்சேரி இ.சி.ஆரில் தற்போது லதா ஸ்டீல் ஹவுஸ் முதல் பாக்கமுடையன் பேட் வரை சுப நிகழ்ச்சிக்கு வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் சாலையின் நடுவே உள்ள மின்விளக்கு கம்பங்களில் டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டும், 10 அடி நீளமுடைய இரும்பு பைப்பில் கட்சியின் கொடிகளும் நடப்பட்டுள்ளன.

இவ்வாறு சாலையின் நடுவே நடப்பட்டுள்ள இரும்பு பைப்பிலான கொடி கம்பங்கள், காற்றின் காரணமாக திடீரென கீழே சாய்ந்தால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஹெல்மெட் விவகாரத்தில் கடும் கெடுபிடி காட்டும், அரசு மற்றும் போலீசார், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில், சட்டவிரோதமாகபேனர், கொடிகம்பங்களை சாலையின் நடுவே வைத்து, அலப்பறைசெய்யும் அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement