மருத்துவ இட ஒதுக்கீட்டில் சட்ட நடவடிக்கை அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரி: முதுநிலை மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதல்வரும், கவர்னரும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
முதுநிலை மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு சம்மந்தமாக சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பால், புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் மாணவர்கள் முழுமையாக பாதிக்கப்படுவர். அடுத்த கல்வியாண்டில் இருந்து புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவத்தில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அகில இந்திய இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, புதுச்சேரி அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்து முதல்வரும், கவர்னரும் போர்க்கால அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் காலை 9:20 முதல் மாலை 4:20 வரை இயங்க வேண்டும். தனியார் பள்ளிகள் எத்தனை மணிக்கு துவக்க வேண்டும் என தற்போதைய அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.
அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத பல கல்வி நிறுவனங்கள், இந்த அரசாணையை தவறாக பயன்படுத்த கல்வித்துறையே மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. சரியான, புதிய அரசாணையை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.