வங்கிகளில் வசூலிக்கப்படும் மூன்று வித வட்டி; காற்றுள்ளபோதே துாற்றிக்கொள்ளுங்க

வீடு கட்ட நினைப்பவர்கள் கணவன், மனைவி இருவரும் வேலை செய்தால் இணைந்து கடன் பெறுவதே நல்லது. அவ்வாறு விண்ணப்பித்தால், மாத வருமானத்தை, 50-60 மடங்கு தொகையே கடனாக கிடைக்கும். அரசு அனுமதி பெற்ற வீட்டு வரைபடத்தின் கட்டுமான பரப்பளவில் ஆகும் செலவில், 80 சதவீதம் பணமே கொடுக்கப்படும்.

மீதமுள்ள, 20 சதவீத பணத்தை கையில் இருந்து போட்ட பின்பே, கடன் தொகை படிப்படியாக வழங்கப்படும். குறைந்தது, 30 வயதுக்குள் கடன் பெற்று, அதிகபட்சம், 50 வயதுக்குள் அடைத்து விடுவதே நல்லது. வங்கியில் நிலையான வட்டி வீதம், மாறுபடும் வட்டி வீதம், கலவை வட்டி வீதம் என, மூன்று விதமான வட்டிமுறை பின்பற்றப்படுகிறது.

கடன் தொகைக்கான வட்டியானது, ஒரு குறிப்பிட்ட கால அளவு வரை மாறாது. அதன்பின்பு மாறுதலுக்கு உட்படும். அதுவும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மாறாது.

கடன் தொகைக்கான வட்டி வீதம் அவ்வப்போது மாறுபடும். இந்த மாறுபடும் வட்டி விகிதத்திலே, பெரும்பாலான நபர்கள் கடன் வாங்குகின்றனர்.

கடன் தொகைக்கான வட்டி, இரண்டு வகை. ஒரு பாதி நிலையான வட்டி விகித்திலும், மறுபாதி மாறுபடும் வட்டி விகிதத்திலும் பிரிக்கப்பட்டு, அதன்படி கடன் தொகை வசூலிக்கப்படும்.

நம் பட்ஜெட்டுக்கு மேல் ஒரு, 20 சதவீதம் அதிக செலவை சமாளிக்கவும், நாம் முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டும். இந்த மூன்று வட்டி விகித கணக்குகளில், ஒத்துவரும் முறையை தேர்வு செய்வது நல்லது. வங்கிகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வட்டி குறைப்பு வசதியும் உண்டு.

அதேபோல் உள்ள வசதிகளை கேட்டறிந்து, உரிய சலுகையை பெற்று பயனடையலாம்.

பெரும்பாலும், கடனை கூடிய சீக்கிரமே அடைத்துவிடுவது நன்மை பயக்கும். பணம் மொத்தமாக வரும்பொழுது, அதை கொண்டு உடனே கடனை அடைத்துவிட வேண்டும்.

அதற்கென வங்கிகள் சிறு தொகை பிடிப்பார்கள். 'யானைபோல் கடன் வாங்க சென்று, புலிபோல் பாய்ந்து வெளியேறி விடுவதே, கடனின் அடிப்படை விதி'.

உடலில் தெம்பு இருக்கின்றபோது, உழைக்கின்ற காலத்திலேயே, நல்ல வருமானம் இருக்கும் சூழலில், கடன் வாங்கி வீட்டை கட்டி, நிம்மதியாக இருங்கள் என்கின்றனர் பொறியாளர்கள்.

Advertisement