அனைத்துக் கட்சி கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம்

47

சென்னை: தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


நாடு முழுதும், லோக்சபா தொகுதிகள், அடுத்த ஆண்டு மறுவரையறை செய்யப்பட உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில், இப்பணிகள் நடந்தால், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், எட்டு தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


தமிழகத்தில் தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை என, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஆனாலும், தொகுதி மறுவரையறையின் போது, தமிழகத்தில் உள்ள தொகுதிகள் எண்ணிக்கையில், பாதிப்பு ஏற்படக்கூடாது என வலியுறுத்தி தமிழக அரசு சார்பில், இன்று (மார்ச் 05) தலைமைச் செயலகத்தில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். ஏற்கனவே, கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க., த.வெ.க., அ.ம.மு.க., என மொத்தம் 58 கட்சிகள் பங்கேற்றுள்ளன. பா.ஜ., நாம் தமிழர் கட்சி புறக்கணித்துள்ளன. கூட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிராக, தென் மாநில எம்.பி.,க்கள் கூட்டுக் குழு அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த முக்கிய தீர்மானங்கள்:



* மக்கள் தொகையில் அடிப்படையில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு மனதாக கடுமையாக எதிர்க்கிறது.


* நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பார்லிமென்ட் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது.


* தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகள் ஒத்திவைக்கப்படும் என்று பார்லிமென்டில் பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும்.


* மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது.


* தென் மாநில பார்லி., உறுப்பினர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்பு குறித்து விழிப்புணர்வு இந்த கூட்டு நடவடிக்கைக் குழு முன்னெடுக்கும்.


* தொகுதி சீரமைப்பு குறித்து அவை சார்ந்த போராட்டங்களை இந்த குழு முன்னெடுக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement