பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு: பூடானுக்கு முதலிடம்

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த வெளிநாடுகளுக்கு எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு என்ற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பூடான், இலங்கைக்கு நிதியுதவி அதிகரித்துள்ளது.


பட்ஜெட்டில் வெளியுறவு அமைச்சகத்துக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.20,516 கோடி. இதில் வெளிநாடுகளுக்கு உதவி வழங்குவதற்கு ரூ.5,483 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, சாலைகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பூடானுக்கு முதலிடம்; 2025-26ம் ஆண்டில் ரூ.2,150 கோடியைப் பெற்று, இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு உதவி பெறும் நாடாக பூடான் தொடர்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.2,068 கோடியை விட அதிகமாகும்.

மாலத்தீவுகளுக்கான இந்தியாவின் ஒதுக்கீடு ரூ.400 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ரூ.200 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2025-26ம் ஆண்டில் ரூ.100 கோடியாகக் குறைந்துள்ளது.

மியான்மருக்கு 2024-25 பட்ஜெட்டில் ரூ.250 கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2025-26ம் ஆண்டுக்கு ரூ.350 கோடியாக அதிகரித்துள்ளது,

நேபாளத்திற்கான தனது ஒதுக்கீட்டை இந்தியா ரூ.700 கோடியாக பராமரித்து வருகிறது. இலங்கை, பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு ரூ.245 கோடியிலிருந்து ரூ.300 கோடியாக அதிகரித்துள்ளது.


கடந்த ஆண்டு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்கு மத்தியில் அந்நாட்டிற்கு உதவி ரூ.120 கோடியாக மாறாமல் உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளுக்கான உதவி கடந்த ஆண்டு ரூ.200 கோடியிலிருந்து ரூ.225 கோடியாக உயர்ந்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஒதுக்கீடு ரூ.90 கோடியிலிருந்து ரூ.60 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement