வருமான வரியில் மாற்றம்; ரூ.24 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கும் பலன் கிடைக்கும்; நிர்மலா சீதாராமன்


புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களின் மூலம், வரி செலுத்துபவர்களுக்கு கூடுதல் கையிருப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டானது குறிப்பாக, 6 துறைகளை மறுசீரமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. வரித்துறை, எரிசக்தி துறை, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கத்துறை, நிதித்துறை, ஒழுங்குமுறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.


மூலதன முதலீட்டுக்கான பொது செலவினம் ஏதும் குறைக்கவில்லை. அரசாங்கம் பொருளாதார வளர்ச்சிக்காக மூலதன முதலீடுகளை செய்வதில் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கும். நிதி நிலைமை முறையாக பராமரிக்கப்படுகிறது.


கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு என்ன செய்தது, தற்போது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ன செய்துள்ளது என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களினால் ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வரை சம்பாதிப்பவர்களும் பலனடைகின்றனர்.


ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் எந்த வரியையும் செலுத்த தேவையில்லை. தற்போது செய்துள்ள மாற்றத்தின் மூலம் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வருமான வரி செலுத்த தேவையிலை. வரி செலுத்துபவர்களின் கைகளில் அதிக பணம் இருப்பு வைக்க முடியும். இதன் மூலம், பரவலான மக்கள் பலனடைகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய நிதித்துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே கூறியதாவது: ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை இருப்பவர்களுக்கு வருமான வரி கிடையாது. வரி விலக்கு உச்ச வரம்பு, முதலில் ஆண்டுக்கு 2.2 லட்சம் ரூபாயாக இருந்தது. 2014ம் ஆண்டு 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
2019ம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் ஆனது. பின்னர் 7 லட்சம் ரூபாய் என்று உயர்த்தப்பட்டது, இப்போது 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர், வரி செலுத்த தேவையில்லை என்று அரசு கருதுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement