பீஹார் வாக்காளர்களை கவர பா.ஜ., முயற்சி; ப.சிதம்பரம் விமர்சனம்

22


புதுடில்லி: பீஹார் மக்களை கவரும் வகையில் மத்திய அரசு பட்ஜெட்டை உருவாக்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும், பீஹார் மக்களையும் கவருவதற்கு பா.ஜ., முயற்சிக்கிறது. இந்த பட்ஜெட்டானது, பீஹாரில் ஓட்டுப்போட தகுதியான 7.64 கோடி மக்களால் வரவேற்கப்படும். அதைத் தவிர பிற மாநில மக்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., எம்.பி.,க்களின் கைதட்டல்களுடன் கூடிய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆறுதலான வார்த்தைகள் மட்டும் தான்.

கடந்த 2024-25ம் நிதியாண்டில் திருத்தப்பட்ட வருவாய் ரூ.41,240 கோடியும், திருத்தப்பட்ட நிகர வரி வருவாய் ரூ.26,439 கோடியும் குறைந்துள்ளது. அதேபோல, மொத்த செலவினங்களும் ரூ.1.04,025 கோடியாக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மூலதன செலவு ரூ.92,682 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டை காட்டிலும் சுகாதாரத்துறைக்கு ரூ.1,255 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.11,584 கோடியும், சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.10,019 கோடியும், வேளாண்துறைக்கு ரூ.10,992 கோடியும், கிராமப்புற மேம்பாடு ரூ.75,133 கோடியும், நகர்ப்புற மேம்பாடு திட்டத்திற்கு ரூ.18,907 கோடியும், வடகிழக்கு மாநில மேம்பாட்டிற்கு ரூ.1,894 கோடியும் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையோர் பிரிவினருக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement