நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய பலன்: பட்ஜெட்டுக்கு நிதிஷ் குமார் பாராட்டு
புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள பட்ஜெட்டால் நடுத்தர வர்க்கத்தினர் மிகப்பெரிய பலன் அடைவர் என்று பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.
வரும் 2025-26க்கான பட்ஜெட்டில் பீஹாருக்கான பல சிறப்புத் திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் குறித்து சமூகவலைதளத்தில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது:
மத்திய பட்ஜெட் நேர்மறையானது; வரவேற்கத்தக்கது. முற்போக்கானது மற்றும் எதிர்காலத்தை நோக்கியது. பட்ஜெட்டில் பீஹாருக்கான பல சிறப்புத் திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.
வருமான வரி குறித்த இரண்டு பெரிய அறிவிப்புகளுக்காக, அதாவது உச்சவரம்பை ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தியதற்கும், புதிய வரி அடுக்குகளை மறுசீரமைப்பதற்கும் அவரை பாராட்டுகிறேன்.
நுகர்வோரின் கைகளில், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து, பணம் பெரிய அளவில் அதிகரிக்கும். நடுத்தர வர்க்கத்தினருக்கு நிறைய நிவாரணம் கிடைத்துள்ளது.
கிசான் கிரெடிட் கார்டு மீதான கடன் வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரிப்பதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள். நுண் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத்தை ரூ.10 கோடியாக அதிகரிப்பது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.