ஆஸ்திரேலிய பெண்கள் அணி அசத்தல்: ஆஷஸ் கோப்பை வென்றது
மெல்போர்ன்: இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்டில், இன்னிங்ஸ், 122 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி, ஆஷஸ் கோப்பை வென்றது.
ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து பெண்கள் அணி, மூன்று ஒருநாள், மூன்று 'டி-20', ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்றது. ஒருநாள் (3-0), 'டி-20' (3-0) தொடர்களை முழுமையாக வென்ற ஆஸ்திரேலியா, ஏற்கனவே ஆஷஸ் தொடரை கைப்பற்றியது.
மெல்போர்னில், இவ்விரு அணிகள் மோதிய பகலிரவு டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 170, ஆஸ்திரேலியா 440 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் ஏமாற்றிய இங்கிலாந்து அணி 148 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. டாமி பியூமண்ட் (47), கேப்டன் ஹீதர் நைட் (32) ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் 'சுழலில்' அசத்திய அலானா கிங் 5, ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட் சாய்த்தனர்.
மூன்று தொடர்களின் முடிவில் ஆஸ்திரேலியா 16-0 என, ஆஷஸ் கோப்பை வென்றது. முதல் இன்னிங்சில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் அன்னாபெல் (163), ஆட்ட நாயகி விருது வென்றார். இத்தொடரில் 23 விக்கெட் (டெஸ்ட் 9, ஒருநாள் 11, 'டி-20' 3) சாய்த்த ஆஸ்திரேலியாவின் அலானா கிங், தொடர் நாயகி விருதை கைப்பற்றினார்.