சேதமான நடைபாதை சீரமைக்க வலியுறுத்தல்
கீழ்ஒட்டிவாக்கம்:செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக திருத்தணி செல்லும் சாலை, 85 கி.மீ., நீளம் உடையது. வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இந்த இரு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலை, நான்கு வழியாக விரிவுபடுத்தப்பட்டு சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் மற்றும் மழைநீர் கால்வாய்க்கும், சாலைக்கும் இடையே உள்ள நடைபாதைக்கு சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், காஞ்சிபுரம் அடுத்த கீழ்ஒட்டிவாக்கம் -- வெண்குடி இடையே சிமென்ட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கனரக வாகனம் சென்றதால், சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.