விளையாட்டுத் துறைக்கு ரூ.3,794 கோடி: மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு
புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் (2025-26) விளையாட்டுத் துறைக்கு ரூ. 3,794 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட ரூ. 351 கோடி அதிகம்.
இதன் முக்கிய அம்சங்கள்.
* 'கேலோ' இந்தியா போன்ற விளையாட்டுக்கு ரூ. 1000 கோடி.
* தேசிய அளவில் பயிற்சி முகாம் நடத்துவது, விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, பயிற்சியாளர்களை நியமனம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும் இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு (எஸ்.ஏ.ஐ.,) ரூ. 830 கோடி.
* தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு ரூ. 400 கோடி.
* தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்துக்கு ரூ. 24.30 கோடி. தேசிய ஊக்க மருந்து ஆய்வகத்துக்கு ரூ. 23 கோடி.
* தேசிய விளையாட்டு வளர்ச்சிக்கான நிதி, கடந்த ஆண்டை போல ரூ. 18 கோடி.
* விளையாட்டு நட்சத்திரங்களுக்கான ஊக்கத் தொகை ரூ. 42.65 கோடியில் இருந்து ரூ. 37 கோடியாக குறைப்பு.
* ஜம்மு--காஷ்மீரில் விளையாட்டு வசதியை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு.
* தேசிய சேவை திட்டத்திற்கு (என்.எஸ்.எஸ்.,) ரூ. 450 கோடி ஒதுக்கீடு.
மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட செய்தியில், ''விளையாட்டு உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது,'' என, தெரிவித்திருந்தார்.