சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கோவில் அருகே சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். '
இந்நிலையில், கோவில் அமைந்துள்ள தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக ‛மேன்ஹோல்' வழியாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.
இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, அருகே உள்ள ராகு, கேது பரிகார ஸ்தலமான மாகாளேஸ்வரர், காஞ்சி காமாட்சியம்மன், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, ஆதிகாமாட்சி கோவில் அருகே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.