இடைக்கழிநாடு பேரூராட்சியில் பனை விவசாயிகள் ஆலோசனை
செய்யூர்,
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2,000த்திற்கும் மேற்பட்ட பனை விவசாயிகள் உள்ளனர்.
பனையூர், கோவைப்பாக்கம், கப்பிவாக்கம், கோட்டைக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் இப்பகுதியில் பிப்., முதல் ஜூலை மாதம் வரை பனைத் தொழிலாளர்கள், கள் மற்றும் பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
கள் மற்றும் பதநீர் விற்பதால் கிடைக்கும் வருமானம், இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
தற்போது கள் சீசன் துவங்க உள்ள நிலையில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், கள் இறக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இறக்க அனுமதி பெறுவது குறித்து இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பனை விவசாயிகள் நேற்று வெண்ணாங்குப்பட்டு பகுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கள் விற்பனையின் போது கலப்படம் செய்யக்கூடாது, கள் இறக்கவும், விற்பனை செய்யவும் எந்த அதிகாரிகளுக்கும் லஞ்சம் வழங்க கூடாது, பாகுபாடு இன்றி அனைத்து பனை விவசாயிகளும் ஒன்றிணைந்து கள் மற்றும் பதநீர் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் 100க்கும் மேற்பட்ட பனை விவசாயிகள் பங்கேற்றனர்.