சாதிக்குமா இளம் இந்தியா: 'டி-20' உலக கோப்பை பைனலில்

கோலாலம்பூர்: பெண்கள் 'டி-20' உலக கோப்பை (19 வயது) பைனலில் இந்திய அணி வெற்றி பெற்று மீண்டும் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. இன்று கோலாலம்பூரில் நடக்கும் பைனலில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் (9 விக்.,), மலேசியா (10 விக்.,), இலங்கையை (60 ரன்) வீழ்த்திய இந்தியா, 'சூப்பர்-6' சுற்றில் வங்கதேசம் (8 விக்.,), ஸ்காட்லாந்து (150 ரன்) அணிகளை வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை (9 விக்.,) வீழ்த்திய இந்தியா, தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.

நுாறு சதவீத வெற்றியுடன் களமிறங்கும் நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணிக்கு, பேட்டிங்கில் திரிஷா (265 ரன், சராசரி 66.25), கமலினி (135 ரன், சராசரி 45.00) நம்பிக்கை தருகின்றனர். பவுலிங்கில் வைஷ்ணவி (15 விக்.,), ஆயுஷி (12), பருனிகா (8), ஜோஷிதா (6) பலம் சேர்க்கின்றனர். இந்தியாவின் வெற்றிநடை தொடர்ந்தால், 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
லீக் சுற்றில் நியூசிலாந்து, சமோவா, நைஜீரியாவை வென்ற, கைலா தலைமையிலான தென் ஆப்ரிக்கா, 'சூப்பர்-6' சுற்றில் அயர்லாந்தை தோற்கடித்தது. அடுத்து நடந்த அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்ற தென் ஆப்ரிக்கா முதன்முறையாக பைனலுக்கு முன்னேறியது. இன்று மீண்டும் அசத்தினால், முதன்முறையாக 'டி-20' உலக கோப்பை வெல்லலாம்.

Advertisement