'கோல் போஸ்ட்' விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு
ஆவடிஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஷ், 30; விமானப்படை அலுவலக பணியாளர்.
இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். மகன் ஆத்விக், 7, விமானப் படை பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன், குடியிருப்பில் உள்ள கால்பந்து மைதானத்தில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, கோல் கீப்பராக நின்றிருந்த சிறுவன் மீது, எதிர்பாராத விதமாக இரும்பால் ஆன தற்காலிக, 'கோல் போஸ்ட்' விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மயங்கி விழுந்தான். சிறுவனின் பெற்றோர் அவனை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், சிறுவன் இறந்தது தெரிந்தது.
ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.