டில்லி உஷ்ஷ்ஷ்: கூட்டணிக்கு ரகசிய பேச்சுவார்த்தை!
சென்னை: வேங்கைவயல் சம்பவம், அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை என, பல விஷயங்கள் ஆளும் தி.மு.க., கூட்டணிக்குள் புகைச்சலைக் கிளப்பியுள்ளன. ஒரு சில கூட்டணி தலைவர்கள் வெளிப்படையாகவே தி.மு.க.,வை கண்டனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், டில்லி காங்கிரஸ் வட்டாரங்களில் கூட்டணியில் உள்ள தலைவர் தொடர்பாக, ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த பிரமுகர், டில்லியில் உள்ள காங்கிரஸ் பொதுச்செயலர் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த காங்., தலைவர் ராகுலுக்கு நெருக்கமானவர்; தமிழ் நன்றாக பேசக்கூடியவர்.
அவரிடம், தன் மனக்குமுறல்களை கொட்டி விட்டாராம் தமிழக பிரமுகர். 'கூட்டணியில் எங்களுக்கு மரியாதை கிடையாது. பல விஷயங்களில், தமிழக அரசு தவறாக நடந்து கொள்கிறது. குறிப்பாக, தமிழக காவல்துறை. இது குறித்து, தி.மு.க., தலைமையிடம் பேசினாலும் எதுவும் நடக்கவில்லை.
'வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என, தி.மு.க.,வினர் சொல்கின்றனர்; அப்படியென்றால், கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப் போகின்றனர்? இது குறித்து, நான் எதற்கு குடும்ப நபரிடம் பேச வேண்டும். அவருக்கு என்ன அரசியல் தெரியும்?' என, பொரிந்து தள்ளி விட்டாராம்.
'நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகத்தை உங்கள் பக்கம் கொண்டு வர நான் தயார். நீங்கள், தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறினால், நாம் அனைவரும் இணைந்து, 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடலாம். தி.மு.க., அரசு மீது, மக்களுக்கு பெரும் எதிர்ப்பு உள்ளது.
'இந்த விஷயங்களை, ராகுலிடம் பேச வேண்டும்; அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா?' எனவும் கேட்டாராம் தமிழக பிரமுகர்.