3ம் தேதி மாலை முதல் வெளியூர் நபர்களை வெளியேற்ற சோதனை

ஈரோடு: 'தேர்தல் பிரசாரம் முடியும் 3ம் தேதி மாலை வெளியூர் நபர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியேற்றப்படுவர்' என, போலீசார் தெரிவித்தனர்.


ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 5ல் நடக்கிறது. 3 ம் தேதி மாலை தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. ஈரோடு மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரம் நிறைவு பெறும், 3ம் தேதி மாலை வெளியூர் நபர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியேற்றப்படுவர் என போலீசார் தெரிவித்தனர்.இதுபற்றி போலீசார் கூறியதாவது: வரும் 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. மாலை, 5:00 மணி முதல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட லாட்ஜ்கள், ரிசார்ட்கள், பண்ணை வீடுகள், திருமண மண்டபங்களில் தீவிர சோதனை நடத்தப்படும். வெளியூரை சேர்ந்த நபர்கள் தங்கி இருக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரும், அங்கிருந்து வெளியேற்றப்படுவர்.
வெளியூர் நபர்கள் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இல்லை என்பது 3 இரவு உறுதி செய்யப்படும். 5ம் தேதி மாலை 6:00 மணி வரை அதாவது ஓட்டுப்பதிவு நிறைவு பெறும் வரை வெளியூர் நபர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இல்லை என்பதை உறுதி செய்ய தீவிர சோதனை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறினர்.

Advertisement