ஓட்டு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு

ஈரோடு: 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் மையத்தில், ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்படும்' என, போலீசார் தெரிவித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும், 5ல் நடக்கிறது. பதிவான ஓட்டுகள், 8ல் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லுாரி வளாகத்தில் எண்ணப்படுகிறது. நண்பகலில் முன்னணி விபரமும்,
மாலையில் வெற்றி நிலவரமும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஓட்டு எண்ணும் மையத்தில், ஐந்து அடுக்கு பாதுகாப்பு போட வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஓட்டு எண்ணும் நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.இதுபற்றி போலீசார் கூறியதாவது: ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லுாரி வளாகத்தில் வரும், 5 மாலை முதல் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்படும். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்கு
வரத்து போலீசார் என ஐந்து அடுக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 5 முதல் 7 நள்ளிரவு வரை கணிசமான அளவு போலீசார் பணியை தொடர்வர். 8ல் போலீசார் எண்ணிக்கை அதிகாலையிலேயே அதிகரிக்கப்படும். இதுதவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட
இடங்களில் ஓட்டு எண்ணும் தினமான 8ல் முக்கிய சந்திப்புகள், கட்சி அலுவலகங்கள், தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மேலும் தொகுதியில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்படுவர். இதுதவிர அதிரடிப்படை தயார் நிலையில் இருக்கும். பிரச்னை ஏற்படும் இடங்களுக்கு அதிரடி படையினர் அனுப்பி வைக்கப்படுவர்.
இவ்வாறு கூறினர்.

Advertisement