ஓட்டுச்சாவடிக்கு தேவையான 85 வகை பொருட்கள் ஒருங்கிணைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும், 5ல் நடக்க உள்ள
ஓட்டுப்பதிவின்போது ஓட்டுச்சாவடியில் பயன்படுத்த வேண்டிய, 85 வகையான பொருட்களை சாக்கு மற்றும் பெரிய டிரம்மில் ஒருங்கிணைத்து, 'பேக்கிங்' செய்தனர்.


ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள, 237 ஓட்டுச்சாவடிகளில் வரும், 5ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. வரும், 4ல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை மண்டல பொறுப்பு அலுவலர்கள் தலைமையில், லாரிகளில் அந்தந்த
ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்லப்படும். அப்போது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பயன்படுத்தப்படும் பொருட்களை பட்டியலிட்டு, அவற்றையும் எடுத்து செல்வார்கள். ஓட்டுச்சாவடி முதன்மை அலுவலர் அவற்றை பெற்றுச் செல்வார். இதற்காக ஈரோடு மாநகராட்சி பழைய கட்டடத்தில், 237 ஓட்டுச்சாவடிகளுக்கும் தேவையான பொருட்களை ஒருங்கிணைத்தனர். தனித்தனி சாக்கு மற்றும் பிளாஸ்டிக் டிரம்மில் பேனா, பென்சில், ரப்பர், ஸ்டேப்ளர், ஸ்டேப்ளர் பின், சிறிய மற்றும் பெரிய பிளாஸ்டிக் டிரே, பெரிய, சிறிய பிளாஸ்டிக் டிரம், குப்பைகளை சேகரிக்க பிளாஸ்டிக் பக்கெட், சிறிய கயிறுகள், நுால், சீல் வைக்க தேவையான பொருட்கள், பசை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை மறைத்து வைக்க தேவையான பெரிய அட்டை போன்ற, 85 வகையான பொருட்களை ஒருங்கிணைத்தனர்.தவிர விரலில் வைக்கும் மை, அந்தந்த ஓட்டுச்சாவடிக்கான போட்டோவுடன் வாக்காளர் பட்டியல் போன்றவற்றை தனியாக பிளாஸ்டிக் கவரில் கட்டி இணைத்தனர். இவை அனைத்தும், வரும், 4ல் இ.வி.எம்.,களுடன் ஓட்டுச்சாவடி வாரியாக எடுத்து சென்று, ஒப்படைக்கப்படும். இப்பணிகள் இன்று நிறைவடையும், என தேர்தல் பிரிவு
அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement